

பலத்த காற்றின் காரணமாக முருங்கை அதிகம் விளைச்சல் காணும் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் முருங்கைக்காய் வரத்து குறைந்திருப்பதாலும் ஆனி மாத முகூர்த்தம் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாலும் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.100 லிருந்து ரூ.110 வரை ஏலம் போவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாகவே முருங்கைக்காய் போட்டு சாம்பார் வைத்து விட்டால் அதன் மணம் சாப்பிடுபவர்களை ரசித்து சாப்பிட வைக்கும். மேலும் முருங்கைக்காய் மலிவான விலையில் விற்பதாலும் வீடு கொல்லைப் புறங்களில் எளிதாக வளர்வதாலும் எப்போதும் முருங்கைக்காய் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். இதனாலும் பெரும்பாலான வீடுகளிலும் விசேஷங்களிலும் முருங்கைக்காய் சாம்பார் வைப்பதை விரும்புவார்கள்.அத்துடன் முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்களுக்காகவும் மருத்துவ ரீதியாகவும் அவற்றை நமது சமையலில் பயன்படுத்துவோம்.
அப்படி என்ன சத்துக்கள் இதில் உள்ளன?
வைட்டமின் ஏ,சி,கே மற்றும் இரும்புச்சத்து, கால்சியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாக சொல்லப்போனால் பாரம்பரிய சூப்பர்ஃபுட் உணவாக இருக்கிறது முருங்கைக்காய்.
இதை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக நோய் எதிர்ப்புச் சக்தி, வலுவான எலும்புகள் , சீரான செரிமானம் மற்றும் கட்டுப்பாடான இரத்த சர்க்கரை அளவு போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை அடையலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப்புண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு அருமருந்தாகிறது முருங்கைக்காய். முருங்கை விதைகள் குழந்தைகளின் மலக்குடல் பூச்சிகளை நீக்குவதில் சிறந்ததாகிறது.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தக் காய் மற்றும் கீரை மிகவும் நல்லது.காரணம் ஃபோலேட் மற்றும் பிற வைட்டமின்கள் இருப்பதால், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகையை நீக்கி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இப்படி முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த காய்களுள் ஒன்றுதான் முருங்கைக்காய்.
முருங்கைக்காயில் பருப்பு சாம்பார் வைப்பது பொதுவான பழக்கம். வேகவைத்த பருப்பில் சின்ன வெங்காயம் தக்காளிகளை நறுக்கி நன்கு வதக்கி அதில் தேவையான உப்பு சாம்பார் மிளகாய்த்தூள் மற்றும் புளி கரைசல் ஊற்றி கறிவேப்பிலை கொத்துமல்லி தூவி சூடான சோற்றில் நெய்யூற்றி பிசைந்து சாப்பிடுவார்கள்.
சிலர் அதை வேகவைத்து அதன் சதைப்பற்றை எடுத்து பல்வேறு ரெசிபிகளில் சேர்த்து பயன்படுத்துவார்கள். அவரவர் ருசிக்கு ஏற்றவாறு முருங்கைக்காயை வாரம் இருமுறையாவது சமையலில் சேர்த்து வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்லது.
முருங்கைக்காய் பற்றி சில பழமொழிகள் உண்டு..
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் எனும் பழமொழி பிரசித்தம். அதாவது முருங்கை மரத்தின் காய், கீரை, பூ என அனைத்தும் நிறைந்த சத்துக்களைக் கொண்டுள்ளதால் இதைத் தொடர்ந்து உண்பவர்கள் எந்த நோயும் இல்லாமல், முதுமையிலும் கூட ஆதரவுக்கு கைத்தடி ஊன்றாமல் ஆரோக்கியமாக, கைகளை வீசி வெறுங்கையோடு நடப்பார்கள் என்பதே இதன் அர்த்தம்.
வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி என்று கூறுவார்கள். முருங்கைக்கீரை அதிக நேரம் வேக வைக்கப்பட்டால், அதில் உள்ள இரும்புச்சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணம் வீணாகிவிடும். எனவே, முருங்கைக் கீரையை லேசாக மட்டுமே வேக வைக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா? உடலுக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாத காய் முருங்கைக்காய். நோயாளிகள் கூட தாராளமாக முருங்கைக்காய் சாம்பார் சாப்பிடலாம் என்றும் இது பத்தியத்தை அதாவது உணவுக்கட்டுப்பாடுகளை முறித்துவிடாது என்றும் சொல்வார்கள்.
எனவே விலையைப் பார்க்காமல் முருங்கைக்காய் கிடைத்தால் வாங்கி சமையலுக்கு பயன்படுத்தி ஆரோக்கியம் காண்போம்.