காலநிலை மாற்றத்தினால், இரண்டு வருடங்களில் பெய்ய வேண்டிய மழை, 24 மணி நேரத்தில் கொட்டியதால், துபாய் மக்கள் வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால், உயிரிழப்புகள் சம்பவங்களும் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் போர், தீவிரவாதம், சர்வாதிகாரம், வறுமை போன்ற பல பிரச்சனைகள் தலை விரித்தாடும் நேரத்தில், மெதுவாக மற்றொரு பிரச்சனையும் தற்போது உள்நுழைந்திருக்கிறது. ஆம்! அது காலநிலை மாற்றம்தான். உலகின் பல பகுதிகளில் காலநிலை மாற்றத்தால், அதிக வெப்பம் அல்லது அதிக மழை என வலுவானப் பேரிடர்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஐநாவும் உலக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, உலகில் அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு உயரப் போகிறது.
இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய சூழல் ஏற்படலாம். இது மனித குலத்திற்கான Code Red என்று ஐநா, Intergovernmental Panel On Climate என்ற அறிக்கையில் கூறியிருந்தது. அந்த அளவிற்கு காலநிலை மாற்றம் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக சில இடங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் பெங்களூரு குடிநீர் பற்றாக்குறையில் இருப்பதும், இந்த காலநிலை மாற்றத்தினால்தான். மேலும், இதனால் பனிகள் உருகி கடல்நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வெள்ளங்கள், புயல்கள் போன்ற இயற்கை பேரிடர்களும் ஏற்படலாம்.
அந்தவகையில், சமீபக்காலமாக தண்ணீர் பஞ்சத்தில் இருந்து வந்த துபாயில், தற்போது பெரிய அளவில் மழை பெய்துவருகிறது. நேற்று மட்டும் துபாயில் 2 வருடங்களில் பெய்ய வேண்டிய மொத்த மழையும் ஒரே நாளில் பெய்துள்ளது. இதனால் துபாய் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அந்த மழையின் அளவை வானிலை ஆய்வு மையங்களால் கணிக்கவே முடியாத அளவிற்கு உள்ளது. துபாயின் மால் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் போன்ற நகரத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களில் கணுக்கால் அளவு மழை நீர், சாலைகள், குடியிருப்பு வளாகங்கள் என அனைத்திலும் வெள்ளம் பெருகியுள்ளது.
இதனால், இதுவரை 18 பேருக்கு மேற்பட்டோர் இந்த வெள்ளத்திற்கு பலியாகிவுள்ளனர். மேலும் 5 பேர் அதிகாரபூர்வமற்ற முறையில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எப்போதும் கடும் வறட்சியில் இருக்கும் துபாய், தற்போது வெள்ளத்தால் மூழ்கியிருப்பதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால், விமானப் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.