
ஆதார் அட்டை என்பது இந்திய அரசாங்கத்தால் ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் ஆகும். இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கு சான்றாக செயல்படுகிறது. மேலும் வங்கிக் கணக்குகள் தொடங்குதல், பி.எஃப். கணக்குகளை நிர்வகித்தல், அரசுத் திட்டங்களைப் பெறுதல் போன்ற பல பணிகளுக்கு இது அவசியமாக தேவைப்படுகிறது. இந்தியாவில் அனைத்து முக்கிய சேவைகளை பெறுவதற்கு ஆதார் (Aadhaar) கார்டு தேவைப்படுகிறது. நீங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆதார் தொடர்பான சேவைகளை பெறலாம்.
ஆதார் அட்டை பெறுவதற்கும், அதில் உள்ள தகவல்களைப் புதுப்பிப்பதற்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளம் மூலம் நீங்கள் சேவைகளைப் பெற முடியும்.
இந்நிலையில் மத்திய அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையில், ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் எளிதாக்கும் வகையில் இ-ஆதார் (E-Aadhaar) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. சிங்கிள் டிஜிட்டல் இன்டர்பேஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ-ஆதார் மொபைல் ஆப் இந்தாண்டு இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் இனிமேல் தங்களது கைரேகை அல்லது கருவிழி பதிவுகளைப் புதுப்பிக்க மட்டுமே ஆதார் சென்டருக்கு செல்ல வேண்டியிருக்குமே தவிர, மற்றபடி பிறந்த தேதி, போன் நம்பர், முகவரி போன்ற சின்ன சின்ன மாற்றங்களை இ-ஆதார் மொபைல் செயலியை பயன்படுத்தி வீட்டிலேயே ஆதார் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், மின்சாரக் கட்டண ரசீதுகள் போன்ற ஆவணங்களை இந்த செயலி மூலமாகவே பெற்றுச் சரிபார்க்கும் வசதியும் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
இந்த இ-ஆதார் செயலி செயற்கை நுண்ணறிவு (AI), மூலம் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதார் சரிபார்ப்பு செயல்முறைகளை வேகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் பல நாட்கள் எடுக்கும் அரசு சேவைகளை சில நிமிடங்களில் முடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த புதிய செயலியின் சோதனைப் பதிப்பை (early-access) ஆண்ட்ராய்டு பயனர்கள் பதிவிறக்கம் செய்து, தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து அடிப்படை அம்சங்களை முயற்சி செய்து பார்க்கலாம். ஆதார் கார்டு அப்டேட் சேவையை காகிதமற்றதாக மாற்றுவதற்கும், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கவும், மக்கள் இ-சேவை மையங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் தான் இ-ஆதார் செயலியை UIDAI உருவாக்க முக்கிய காரணமாகும். மேலும், ஆதார் கார்டு தகவல் லீக் தொடர்பான அபாயங்களைக் குறைக்கவும் இந்த செயலி உதவுகிறது.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் புதிய இ-ஆதார் செயலி இந்தாண்டு இறுதிக்குள் வெளிவர உள்ளதால் இப்போதே இந்த செயலி மீதான அதிக எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாக்கியுள்ளது.