
இந்தியாவில் தற்போது மிக முக்கிய தனிநபர் ஆவணமாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. இருப்பினும் பலரும் போலியான முகவரியைக் கொடுத்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் ஆதார் அட்டை விண்ணப்பத்தில் போலிகளைத் தடுக்கும் விதமாக விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India).
போலி ஆதார் அட்டைகளை நீக்கி, பாதுகாப்பான மற்றும் வலுவான அடையாள அட்டையாக ஆதாரை மாற்றுவதே இதன் முக்கிய நோக்கம். மத்திய அரசு கடந்த 15 வருடங்களில் கிட்டத்தட்ட 140 கோடி ஆதார் அட்டைகளை விநியோகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் போதும் அல்லது ஆதார் விவரங்களைத் திருத்தும் போதும் கடுமையான விதிகளை கொண்டுவர UIDAI முடிவெடுத்துள்ளது. தற்போது வரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்றையே முக்கிய ஆவணங்களாக கொடுக்கின்றனர். ஆனால் புதிய விதிகளின்படி ஆதார் அட்டை விண்ணப்பத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த ஆவணங்கள் தீவிரமாக சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த ஆவணங்களைச் சரிபார்க்க மேலும் சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதவிர பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, தாய் தந்தை விவரங்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவையும் சரிபார்க்கப்படும். மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ள இந்த விதிகளின் மூலம், ஆதார் அட்டை நம்பகமான மற்றும் பாதுகாப்பான தனிநபர் ஆவணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள ஏற்கனவே இருக்கும் ஆவணங்களும் அவசியம். இதன்மூலம் பொதுமக்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என விதிகளைக் கடுமையாக்கி உள்ளது UIDAI.
புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், பழைய ஆதார் அட்டையை திருத்தவும் புதிய விதிகளின் படி பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன. பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் மற்றும் 10ஆம் வகுப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் அவசியம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய விதிகள் பொதுமக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கலாம். இருப்பினும் போலிகளைத் தடுக்கவும், ஆதார் செயல்முறையை எளிமை மற்றும் பாதுகாப்பாக மாற்றவும் இந்த விதிகள் அவசியம் என UIDAI தரப்பில் கூறப்படுகிறது.