
உலகில் உள்ள பாரம்பரியமான இடங்களை ஆய்வு செய்து, உலகப் பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தை வழங்கும் நோக்கில் யுனெஸ்கோ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாரம்பரியம் நிறைந்த இடங்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சமே இல்லை. இருப்பினும் ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்,ன மற்றும் கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும். இந்தப் பட்டியலில் தற்போது ஆறாவது சின்னமாக விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையும் இடம் பிடித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டையும் சேர்த்து மொத்தம் 12 கோட்டைகளை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டி யுனெஸ்கோவிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் 27 இல் செஞ்சிக் கோட்டையை ஆய்வு செய்தார் யுனெஸ்கோவைச் சேர்ந்த ஹவாஜங் லீ ஜகாம்ஸ்.
இவர் ராஜகிரி கோட்டையின் மேல் மற்றும் கீழ் தளங்களை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகளுக்கு இடையில் ரோப் கார் வசதியை ஏற்படுத்தினால் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்ற கோரிக்கையும் அவரிடம் வைக்கப்பட்டது.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை முன்னெடுக்க அவர் கட்டிய 12 கோட்டைகளை உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க மகாராஷ்டிரா அரசு அதிக முனைப்பு காட்டியது. யுனெஸ்கோ ஆய்வு செய்த பின், எப்படியும் உலக அங்கீகாரம் கிடைத்து விடும் எனக் காத்துக் கொண்டிருந்த மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு இன்று நற்செய்தி வந்துவிட்டது.
இதன்படி செஞ்சிக் கோட்டை உள்பட மொத்தம் 12 கோட்டைகளை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ. இதன்மூலம் தமிழ்நாட்டின் ஆறாவது உலகப் பாரம்பரியச் சின்னமாக மிளிர்கிறது செஞ்சிக் கோட்டை. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
செஞ்சிக் கோட்டைக்கு உலகளவிலான அந்தஸ்து கிடைத்திருப்பதால், இதனைப் பாதுகாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தமிழ்நாடு அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளும் தனித்தனியாக நிதி ஒதுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பாரம்பரியச் சின்னமான செஞ்சிக் கோட்டையில் மண்டபங்கள், குளங்கள், கோயில்கள், சுனைகள், நெற்களஞ்சியம் மற்றும் படைவீரர்கள் தங்கும் பகுதி போன்றவை உள்ளன. மிகுந்த கலைநயத்துடன் இங்கு கட்டப்பட்டுள்ள கல்யாண மண்டபம் தான் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.