ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் நாட்களில் பிச்சை எடுத்து மூன்றே நாட்களில் மூன்று லட்சம் வருமானம் ஈட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிச்சை எடுக்கிறவன்லா பணக்காரனா இருக்கான் என்று சினிமாவில் ஜோக்குக்காக சொல்லி கேட்டிருப்போம். ஆனால், நிஜத்தில் இது சாத்தியமா என்று யோசிக்கும்போது “அது எப்படி சாத்தியமாகும்?” என்று கடந்துச் சென்றுவிடுவோம்.
ஆனால், தற்போதை நிலைமையை பார்த்தால் பிச்சைக்காரர்கள் நிஜமாகவே நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆம்! நிறைய சில்லறைகளையும் நோட்டுகளையும் வைத்து எண்ணும்போது நம்மைவிட அவர்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்பது போல் இருக்கிறது. குறிப்பாக பேருந்து நிலையங்களிலும், கோவில் வாசல்களிலும் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள்.
உலகின் பணக்கார பிச்சைக்காரரான பாரத் ஜெயின் 40 ஆண்டுகளாக பிச்சை எடுப்பதை தனது வேலையாக செய்து இன்று ரூ.7.5 கோடி சொத்து வைத்துள்ளார். பாருங்களேன்… நாம் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் கூட இவ்வளவு சொத்து மதிப்பு வைத்திருப்போமா என்பது கூட தெரியவில்லை.
சரி!! அதை விடுங்கள். இங்கு ஒரு பிச்சைக்காரர் மூன்றே நாட்களில் மூன்று லட்சம் சம்பாதித்த கதையை பார்ப்போமா??
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரமலான் மாதத்தில் பிச்சை எடுப்பது குற்றமாக கருதப்படுகிறது. சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், சிலர் அதைக் கண்டுகொள்ளாமல் செயல்படுகிறார்கள்.
இப்படியான நிலையில்தான், ஷார்ஜாவில் ஒரு மசூதி அருகே ஒருவர் பிச்சை எடுத்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் குறித்தான விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதும், வெறும் மூன்று நாள்களில் பிச்சை எடுத்து ரூ.3.26 லட்சம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
துபாயில் மட்டும் ரமலான் மாதத் தொடக்கத்தில் 127 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.11.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.