

பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ராஜினாமா, தகுதி நீக்கம், மரணத்தைத் தொடர்ந்து 3 மாநிலத்தில் தலா ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வந்த பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின் மாநிலங்களவை எம்பியாக சமீபத்தில் பதவியேற்றார். இதனையடுத்து அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மூன்றாவதாக குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏவான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பீகார் (பங்கிப்பூர் தொகுதி), குஜராத் (மஞ்சள்பூர் தொகுதி) மற்றும் மத்திய பிரதேசத்தில் (ததியா தொகுதி)காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஜூலை 30-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் வரும் ஜூலை 6-ம்தேதி தொடங்கி, ஜூலை 1-ம்தேதி முடியும் என்றும், வேட்புமனுக்களின் பரிசீலனை ஜூலை 14-ம்தேதி நடைபெறும் மற்றும் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 16-ம்தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
3 மாநிலத்தில் தலா ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தும், அரசிதழில் வெளியிட்டிருக்கும் நிலையிலும் தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவை சேர்ந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த வாரம் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தநிலையில் நேற்று தவெகவில் இணைந்தனர்.
இவர்களின் இரு தொகுதிகள் சேர்க்கப்படாவிடினும், கடந்த மே மாத இறுதியிலேயே 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
போன மாதம் ஜூன் 2-ம்தேதி குஜராத் மஞ்சள்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் உயிரிழந்த நிலையில், அவரின் தொகுதிக்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும்போது, மே மாதம் காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்குக்கூட தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபுறம் தற்போது வரை அதிமுகவில் 6 எல்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் வரும் நாட்களில் மேலும் ஒருசில அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், தான் தமிழ்நாட்டிற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லையா? என்ற சந்தேகமும் எழுகிறது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து அறிவிக்கவில்லையா என்ற குழப்பமும் நிலவிவருகிறது.
அதேசமயம் இடைத்தேர்தல் நடத்த 6 மாதம் கால அவகாசம் இருப்பதால் இன்னும் சிலகாலம் தாமதமாக தமிழகத்துக்கு தேதி அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.