‘பிரிந்து சென்றவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்கத் தயார்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

‘பிரிந்து சென்றவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்கத் தயார்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

‘அதிமுகவின் கட்சி கட்டுப்பாட்டை மீறி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். அப்படி சேருபவர்கள் மட்டுமே அதிமுகவின் கட்சி உறுப்பினர்களாகக் கருதப்படுவர்’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com