அமெரிக்க பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க் எப்போதும் அதிரடியாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் தேர்ந்தவர். சமீபத்தில் அவர் விக்கிபீடியாவிற்கு போட்டியாக ஒரு அதிநுட்பம் நிறைந்த கலைக் களஞ்சியத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருந்தார். அதன்படி க்ரோகிபீடியா என்ற கலைக் களஞ்சியத்தை அறிமுகம் செய்தார்.
விக்கிபீடியாவையும், அதை இயக்கும் விக்கிமீடியா (Wikimedia) என்ற இலாப நோக்கற்ற அமைப்பையும் எலான் மஸ்க் நீண்ட காலமாகவே விமர்சித்து வந்தார். விக்கிபீடியாவை அவர் கேலியாக 'வோக்கிபீடியா' (Wokipedia), 'டிக்கிபீடியா' (Dickipedia) என்றும் விமர்சித்துள்ளார். 2023-ம் ஆண்டு, விக்கிபீடியாவின் பெயரை 'டிக்கிபீடியா' என்று மாற்றினால், அதற்கு 1 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் அவர் நகைச்சுவையாகப் பேசினார்.இந்த நிலையில் தான் எலான் மஸ்க் தனது எக்ஸ்ஏஐ நிறுவனம் மூலம் 'க்ரோகிபீடியா' (Grokipedia) என்ற புதிய ஏ.ஐ. தளத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்து உள்ளார்.
இது எலான் மஸ்க் தொடங்கிய xAI என்னும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தின் ஒரு புதிய முயற்சியாகும். இது முழுக்க முழுக்க AI-யால் இயங்கும் ஆன்லைன் தகவல் களஞ்சியம் ஆகும்.இது மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்த்தை காசு கொடுத்துப் பயன்படுத்தும் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்குக் க்ரோக் AI சாட்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விக்கிபீடியா VS க்ரோகிபீடியா:
விக்கிபீடியாவில் அதன் அடிப்படைக் கொள்கைதான் , அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிமையாக உள்ளது. இது ஒரு இலாப நோக்கமற்ற அறக்கட்டளையால் இயக்கப்படும் தளம். இதன் உள்ளடக்கங்கள் உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்கள் , மற்றும் சமூகம் மூலம் எழுதப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப் படுகின்றன. இதனால் சில தகவல்களில் யார் வேண்டுமானாலும் புகுந்து தங்களது கருத்தை உண்மையை போல புகுத்தி விட முடியும். இதனால் ஒருதலைப்பட்சமான கருத்துகள் உள்ளே புகுத்தி விடுவதாக கருத்துக்கள் உண்டு.
க்ரோகிபீடியாவில் நினைத்த அனைவரும் சென்று தகவல்களை மாற்றி விட முடியாது. இதன் அணுகல் எளிமையாக இருப்பதில்லை.இதன் அடிப்படை தனியுரிமை கொள்கைகளும் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக உள்ளது.இதில் சேர்க்கப்படும் தகவல்களை சரிபார்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்படுகிறது.
க்ரோகிபீடியா 0.1 பதிப்பு:
ஆரம்ப நிலையில் இருக்கும் க்ரோகிபீடியாவில் முதல் பதிப்பு '0.1' என்ற பெயரில் அக்டோபர் 27 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக , இதை விட பத்து மடங்கு சிறப்பாக இருக்கும் வகையில் வரவிருக்கும் க்ரோகிபீடியா 1.0 பதிப்பு இருக்கும். இதைப் பற்றி எலான் மஸ்க் "க்ரோகிபீடியாவில் 0.1 பதிப்பு கூட விக்கிபீடியாவின் அடிப்படை எண்ணத்தை விடச் சிறந்ததுதான்" என்று தனது X தளத்தில் பெருமையாக பதிவிட்டுள்ளார்.
க்ரோகிபீடியா அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் குறுகிய காலத் தடங்கலும் , அதிக ட்ராஃபிக்கினால் ஏற்பட்ட தொழில்நுட்பச் இடையூறுகள் காரணமாக சில மணி நேரங்களிலேயே அந்த தளம் வேலை செய்வதை நிறுத்தி விட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு, இப்போது 8.85 லட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகளை பதிவு செய்துள்ளது.
கடுமையான தனியுரிமை:
இதில் விக்கிபீடியாவைப் போல ஒரு பயனர் தான் நினைத்தபடி நேரடியாகப் பக்கங்களைத் திருத்த முடியாது. அவ்வாறு ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் , நீங்கள் அதில் உள்ள கருத்து தெரிவிக்கும் படிவம் மூலம் மட்டுமே பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க முடியும். இதனால் , இதில் உள்ள தகவல்கள் அதிக நம்பிக்கை கொண்டதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விக்கிபீடியா மீது ஒருதலைப்பட்சம் குறித்த விமர்சனங்களை மாஸ்க் முன் வைத்தாலும் , அவரது க்ரோகிபீடியா பக்கச் சார்பற்றதாக இருக்கும் என்று மஸ்க் உறுதியளித்தாலும், சில பயனர்கள் அதில் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் பற்றிய கட்டுரைகளில், அவர்களை விமர்சிக்கும் சில சர்ச்சைக்குரிய விவரங்கள் காணாமல் போயுள்ளதாக பயனர்கள் கூறுகின்றனர்.