

பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் பால் மற்றும் தயிர் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தினாலும் இரண்டொரு நாட்களில் கெட்டுப் போகும். ஆனால் கெஃபீர் என்கிற பானம் சாதாரணப் பால், தயிர் அல்லது மோர் போன்றது அல்ல. இது 3000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும், நொதிக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் அற்புதமான பழமையான பானம். இதை வீட்டிலேயே எப்படித் தயாரிப்பது, அதன் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கெஃபீர் பால் அருந்துவதன் நன்மைகள்
கெஃபீர் என்பது ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் நிறைந்தது. சாதாரணத் தயிரை விட பல மடங்கு அதிகமான நல்ல பாக்டீரியாக்கள் இதிலுள்ளன.
இதைத் தினமும் சிறிதளவு பருகினாலே வயிற்று ஆரோக்கியம் மேம்படுகிறது. இரண்டாவது மூளை என்று அழைக்கப்படும் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருந்தால் வாய் துர்நாற்றம், அஜீரணக் கோளாறுகள், வாயு வெளியேறுதல், மோசமான வாடை போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் கெஃபீர் தொடர்ந்து பருகுவதன் மூலம் உடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து, வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் குணமாகும்.
இந்தப் பால் கெட்டே போகாது என்பது அதிசயமான உண்மையாகும். இந்தப் பாலில் அதிக சத்துக்கள் உள்ளன. 250 மில்லி கெஃபீர் பாலில் சுமார் ஒன்பது கிராம் புரதம் உள்ளது. இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். தோல் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இறந்த செல்களை நீக்கி முகமும் உடலும் பளபளப்பாக காட்சியாளிக்கும். இதில் புரதம் நிறைந்திருப்பதால் முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது. முடி உதிர்வது நின்று விடும். இதில் விட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் எலும்புகளுக்கும் மிகவும் நல்லது.
கெஃபீர் தயாரிக்கும் முறை:
ஆன்லைனில் ஆர்டர் செய்து கெஃபீர் தானியங்களை வாங்கிக் கொள்ளலாம். விலை அதிகமாக இருந்தாலும் இது ஒரு முறை மட்டும் செய்யப்படும் முதலீடு ஆகும். இந்த தானியங்களை வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்தலாம் என்பது இதில் உள்ள சிறப்பு. மாட்டுப்பால் அல்லது ஆட்டுப்பாலாக இருந்தால் அதைக் காய்ச்சி ஆற வைத்த பின்னரே கெஃபீர் தானியத்தை கலக்க வேண்டும். பாக்கெட் பாலாக இருந்தால் காய்ச்ச வேண்டியதில்லை.
கெஃபீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரம் கண்ணாடி அல்லது உயர்தரமான பிளாஸ்டிக் பாத்திரமாக இருக்க வேண்டும். 5 கிராம் கெஃபீர் தானியத்தை இந்தப் பாத்திரத்தில் போட்டு காய்ச்சி ஆற வைத்த 250 மில்லி பாலை இதில் ஊற்ற வேண்டும். பாத்திரத்தை இறுக்கமாக மூடி வைக்கக் கூடாது. இதில் நொதித்தல் நடக்கும் போது கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும். எனவே ஒரு காற்றோட்டமான துணியால் மூடி ரப்பர் பேண்ட் போட்டுக் கட்டி வைக்க வேண்டும். 12 முதல் 24 மணி நேரம் வரை நொதிக்க விட வேண்டும். 24 மணி நேரம் கழித்து பாலை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி கெஃபீர் பாலை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல்முறையாக கெஃபீர் பழகுபவர்கள் ஒரு நாளைக்கு சுமார் கால்டம்ளர் மட்டும் 50 மில்லி மட்டும் பருகலாம். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு 250 மில்லி வரை குடிக்கலாம். வடிகட்டிய கெஃபீர் தானியங்களை உடனடியாக அடுத்த நாள் கெஃபீர் பால் தயாரிப்பதற்காக மீண்டும் புதிய பாலில் போட்டு விட வேண்டும்.
இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் இவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் செத்துப் போகும். எனவே ஊருக்கு செல்லும் போதோ அல்லது பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளிலோ தானியங்களை சிறிதளவு பாலுடன் இறுக்கமாக மூடி பிரிட்ஜில் வைத்து விட்டால் மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)