
இந்தியாவில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, யுபிஐ (UPI) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாகிவிட்டன. கூகிள் பே, போன் பே, பேடிஎம் போன்ற மொபைல் வாலட்களும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்றன. சிறிய கடை வைத்திருப்பவர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை, கடைகளில் பொருட்கள் வாங்குவது முதல் அனைத்தும் தற்போது டிஜிட்டல் கட்டண நுழைவாயில்கள் உதவியுடன் கூடிய QR குறியீடுகள் மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.
யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நாட்டில் உள்ள முக்கால்வாசி பேர் கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. அனைத்தையும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமே செய்கின்றனர். இந்நிலையில் திருப்பத்தூரில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பிச்சை எடுக்கும் முதியவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளது.
பிச்சையெடுப்பதில் இப்போது பல்வேறு நவீன உத்திகளை பிச்சைக்காரர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த பிச்சைக்காரர் டிஜிட்டல் முறையில், கையில் பணம் இல்லையா, இந்தாங்க, QR கோடு இதுல பணம் போடுங்கனு கேட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் QR கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுத்து வருகிறார். இவரை அந்த வழியாக செல்பவர்களை அனைவரும் ஆச்சரித்துடன் பார்த்து கடந்து செல்கின்றனர்.
கைல காசு இல்லையா, கவலைப்படாதீங்க.. போன்பே மூலம் காசு தரலாம் என்று QR கோடு அட்டையை காட்டுகிறார். முதியவரின் இந்த வித்தியாசமான அணுகுமுறையால் கவரப்பட்ட பலரும் டிஜிட்டல் முறையில் அவருக்கு பிச்சை போட்டு வருகின்றனர். கையில் காசு இல்லாதவர்கள் போன்பே மூலம் காசு தரலாம். ஐடியா சூப்பர்ல!
முதிவரின் இந்த அணுகுமுறையை ரசித்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்த போது, அவர் தான் 3 வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பதாகவும், அதன் மூலம் 3 ஏ.டி.எம். கார்டுகள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
என்னது ஒருத்தருக்கு ஒரு அக்கவுண்ட் இருந்தாலே அதில் பணம் இருப்பது கஷ்டம், ஆனால் இவர் பிச்சை எடுத்து 3 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருப்பதை கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் QR கோடு அட்டையை வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுப்பதால், செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்தான் தனது பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகளை செய்து வருவதாகவும் கூறினார். இனி வரும் காலங்களில் பல பிச்சைக்காரர்கள் இதேபோல்தான் பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்றும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் அந்த முதியவரை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு ஆதரவாக நிறைய நெட்டிசன்கள் பதிவுகளை குவித்து வருகின்றனர்.
இன்றைய காலத்தில் டெக்னாலஜியை சரியாகப் பயன்படுத்தினால் புத்தசாலித்தனமாக கை நிறைய சம்பாதிக்கலாம் என்பதற்கு இந்த பிச்சைக்காரரின் வழிமுறை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.