Parakkum padai
Parakkum padai

விவசாயி பணம் பறிமுதல், அதிகாரிகள் கூறும் பதில்!

Published on

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் விவசாயி ஒருவரிடம் அதிகாரிகள் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்ற வாரம் சோதனையைத் தீவிரப்படுத்தும்படி தேர்தல் ஆணையம் அறிக்கை விட்டிருந்தது. அந்தவகையில் இந்தியா முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பறக்கும் படையினரின் சோதனை தீவிரமாகவுள்ளது. இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் 50 ஆயிரத்திற்கும் மேல் கையில் ஆவணமின்றி பணம் வைத்திருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படும். கடந்த 23ம் தேதிப் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுப்பட்டிருக்கும் போது அந்த வழியாகச் சென்ற சேரமங்கலம் பொட்டல் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் 65 ஆயிரம் ரூபாயை உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றுள்ளார். அதனைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அப்போது கண்ணன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்துத் தற்போது மாடு வாங்கச் செல்வதாகக் கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று கண்ணன் இதுத்தொடர்பாக மனு ஒன்றை கலெக்டரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மனைவியின் நகைகளை அடகுவைத்து, அந்தப் பணத்தை மாடு வாங்கச் சென்றபோது அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டனர். நான் வீட்டிற்குச் சென்று ரசீது எடுத்து வந்துக் காண்பித்தும் கூட அவர்கள் தரவில்லை” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
சிறுநீரக சிகிச்சையில் புதிய மைல் கல்: பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை!
Parakkum padai

இதனையடுத்துப் பணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள் கூறியதாவது, “ தேர்தலுக்கான விதிமுறைகள் அமலில் உள்ளதால் 50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். இல்லையெனில் பணத்தைப் பறிமுதல் செய்வோம். மூன்று நாட்களுக்குள் ஆவணங்களைக் கொடுத்துப் பணத்தைத் திரும்பப் பெறலாம். இதற்கானக் கமிட்டி வாரத்திற்கு இரண்டு முறை கூடும். அந்தக் கமிட்டியே அவர் கூறுவது உண்மையா பொய்யா என்பதைத் தீர்மானித்துப் பணத்தைக் கொடுக்கும்.

கண்ணன் விவகாரத்தில் அவர் கையில் அப்போது ஆவணம் இல்லை. நேற்று மனுவுடன் அந்த ஆவணத்தையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார். வரும் புதன்கிழமை கமிட்டி கூடும். அப்போது அந்தக் கமிட்டி கண்ணனின் ஆவணத்தை சரிபார்த்து சரியாக இருந்தால், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்” இவ்வாறு கூறினார்கள்.

logo
Kalki Online
kalkionline.com