

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது , ஏராளமான ரசிகர்கள் சாலைகளின் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சாலைகளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது போதுமான அளவில் காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. அதனால், நெரிசல் ஏற்பட்டதாகவும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, அடுத்து விஜய் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் அது தள்ளி வைக்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. இதனால் அவர்களின் பரப்புரை பாதிக்கப்படுவதாகவும் முறையிடப்பட்டிருந்தது.
தவெக புகார் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு சென்னை தேர்தல் ஆணையருக்கு, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்ட நாயக் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குநருக்கு (DGP)க்கு கடிதம் ஒன்று எழுதினார். அந்த கடிதத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், கட்சி பாகுபாடின்றி உரிய சமமான பாதுகாப்பை வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பரப்புரைகளின் போது அதில் கலந்து கொள்ளும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாதுகாப்பாக தொடர்பான விதிமுறைகளையும் மற்ற கட்டுப்பாடுகளையும் அனைத்துக் கட்சிக்கும் சமமாக பின்பற்றப்பட வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும் , முக்கிய தலைவர்களின் பரப்புரையின் போது அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.