பத்மராஜன்...
பத்மராஜன்...

239 - வது முறையாக வேட்பு மனு தாக்கல்- தேர்தல் மன்னன் பத்மராஜனின் குறிக்கோள் என்ன?

தேர்தல் வந்து விட்டாலே எங்கும் பரபரப்பு... எதிலும் எதிர்பார்ப்பு! அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட தற்போதைய அரசியல் தாக்கங்களில் யார் அடுத்து நமது தொகுதிக்கு வரப் போகிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் அரசியலில் ஈடுபாடுடன் தொடர்ந்து விடாக்கண்டன் கொடாக்கண்டனாக 239 வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்த ஆச்சரிய மனிதரான தேர்தல் மன்னன் பத்மராஜன் குறித்து ஒவ்வொரு தேர்தலின் போதும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். இதோ இப்போதும்..யார் இந்த பத்மராஜன்? இவரின் இந்த தளராத முயற்சியின் குறிக்கோள் என்ன?

சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்தவரான பத்மராஜன்   தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதுவரை வெற்றியையே சுவைக்காத இவர் மனம் தளராமல் தொடர்ந்து 239 வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இது குறித்து  தனியாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் பத்மராஜன் கூறியது இது. "1988 ஆம் ஆண்டு முதல் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். ஜனாதிபதி தேர்தல் முதல் கூட்டுறவு மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் வரை அனைத்து தேர்தலிலும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய்,  கருணாநிதி, ஜெயலலிதா முதல் மு க ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி வரை எண்ணற்ற  பிரபலங்களை எதிர்த்துப் போட்டியிட்டு உள்ளேன்".

உலகச் கின்னஸ் சாதனைக்காகவும் தேர்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதாகவும், லிம்கா புக் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றில்  இடம் பெற்றுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
உங்கள் கனவுகளை நனவாக்குவது எப்படி?
பத்மராஜன்...

மேலும் 1996 ஆம் ஆண்டு தேர்தலில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என ஐந்து மாநிலங்களிலும் எட்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் கவனம் பெற்று ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் மட்டுமே மனுதாக்கல் செய்ய முடியும் என்ற சட்டமே இவரால்தான் வந்தது என்கிறார்.

மேலும் இதுவரை தான் எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. வெற்றி என்பது சிறிது நேரமே இருக்கும். தோல்வியை சுமந்து கொண்டே இருக்கலாம் என்றும்  இதுவரை இவர் தேர்தல் தோல்விகளுக்காக ரூபாய் ஒரு கோடி வரை செலவிட்டு உள்ளதாகவும் கூறி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.

எது எப்படியோ இவர் முயற்சியின் பலனாக, இவரது விருப்பத்தின் நிறைவாக இவர் பெயரும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கட்டுமே!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com