காருக்கு ஐந்தே நிமிடத்தில் சார்ஜ் செய்யும் வசதியை சீனா கண்டுபிடித்துள்ளதால், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
சீனா தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. சமீபத்தில்தான் உலகின் முதல் மினியேட்டரைஸ் செய்யப்பட்ட அணுசக்தி அமைப்பு (world’s first miniaturized atomic energy system) கண்டுபிடித்து அசத்தியது. அணு சக்தியால் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்யாமல் அல்லது பராமரிப்பு இல்லாமல் நிலையான மின்சாரத்தை இந்த பேட்டரியால் உற்பத்தி செய்ய முடியும். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த வரிசையில்தான் தற்போது காருக்கு ஐந்தே நிமிடத்தில் சார்ஜ் செய்யும் புதிய வசதியை சீனா கண்டுபிடித்து அசத்தியுள்ளது.
மெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் மட்டுமே 500 கிலோவாட் சார்ஜிங் வசதியை செய்து வந்தது. இதனை முறியடிக்கும் விதமாக சீனாவின் BYD நிறுவனம் கார்களை சார்ஜ் ஏற்றும் புதிய super e-platform தளத்தை அறிமுகப்படுத்தியது.
இது டெஸ்லா நிறுவனத்தைவிட மிக அதிவேகமாக சார்ஜ் ஏற்றும் தன்மைக்கொண்டது. இது 1000 கிலோவாட் சார்ஜிங் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 5 நிமிடங்களில் கார்களை 470 கிலோமீட்டர் தூரம் செல்லத் தேவையான சார்ஜிங் செய்யும் வசதியை தரும்.
எப்போதும் மணி கணக்கில் கார்களுக்கு சார்ஜ் ஏற்றி சலித்துப் போகும் மக்களுக்கு இந்த ஐந்து நிமிட சார்ஜ் வசதி பெரும் நன்மையளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா முழுவதும் நான்காயிரம் இடங்களில் அதிவேக பேட்டரி சார்ஜிங் நிலையங்களை நிறுவப்போவதாக BYD நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், முன்பைவிட தற்போது BYD நிறுவனத்தின் கார்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த நிறுவனம் 3,18,000 மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது சுமார் 161% அதிகரித்துள்ளது. இதனால், டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை 49 % சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.