
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களைக் கொண்டே பல காலமாகப் பெரும்பாலான போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன! அவற்றிலிருந்து வெளியாகும் புகை சுற்றுச் சூழலைப் பாதிக்கவும் செய்தது. அதோடு மட்டுமல்லாது ஒலி (sound pollution) மாசும் அதிகம். இரு சக்கர வாகனங்களில் ஆரம்பித்து இறக்கை கொண்டு பறக்கும் விமானங்கள் வரை இதே கதைதான்!
சமீப காலத்தில், பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. புகை இல்லாமல், புலம்பலைப் போன்ற சத்தமில்லாமல், அவை நம்மைக் கடந்து செல்லும்போது அந்தப் புதுமையைக் கண்டு வியக்கவே தோன்றுகிறது. அதோடு, உலகம் முழுவதுமே இப்பொழுது அதிகச் சப்தம் ஏற்படுத்தும் ஒலிப்பான்களின் (Horn) பயனும் குறைந்தே வருகிறது. அதிலும் மேலை நாடுகளில், மிக அவசியம் என்று தோன்றும் அசாதாரண நிகழ்வுகளின்போது மட்டுமே ஒலிப்பான்களை உபயோகிக்கிறார்கள். மற்றபடி, சாலைகளில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருந்தாலுங்கூட, ஹார்ன் அடிப்பதில்லை.
இரு சக்கர வாகனங்களில் ஆரம்பித்து கார், வேன், பஸ், ரயில் என்று எல்லாமே மின்சாரத்தால் இயங்க ஆரம்பித்தன. அதன் உச்சக்கட்டமாக, உயரே பறக்கும் விமானத்தையும் இப்பொழுது மின்சாரத்தால் இயக்கிச் சாதனை புரிந்துள்ளார்கள் அமெரிக்காவில்.
அந்நாட்டைச் சேரந்த ‘பீடா டெக்னாலஜீஸ்’ என்ற நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே மின்சாரத்தால் இயங்கும் விமானத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தற்போது வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அலியா சிஎக்ஸ்100(Alia cx 100) வகை விமானத்தைத் திருப்திகரமாக இயக்கிக் காட்டியும் உள்ளார்கள். அமெரிக்காவின் கிழக்கு ஹாம்ப்டன் விமான நிலையத்திலிருந்து ஜான் எப்.கென்னடி விமான நிலையம் வரையிலான 130 கிலோ மீட்டர் தூரத்தை, சுமார் அரை மணி நேரத்தில் அந்த விமானம் அடைந்து சாதனை புரிந்துள்ளதாம். ஆனால் போயிங் போன்று பெரிய விமானம் இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடிய குட்டி விமானமாம் அது!
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் அதன் கட்டணம்தான்! இதே விமான நிலையங்களுக்கு இடையே சாதாரண விமானங்களில் பறக்க வசூலிக்கப்படும் கட்டணம் 160 அமெரிக்க டாலராம். நமது இந்திய ரூபாயில் 13885/-.
இந்த லிட்டில் விமானத்தில் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
நான் சொல்வதற்கு முன் ஒரு கண்டிஷன்! கட்டணத்தைக் கேட்டு உங்கள் விரல்கள் மூக்குப் பகுதிக்குச் செல்லக் கூடாது! அதாவது அந்தத் தொகையில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே! ஆமாங்க!ரூபாய் 694/- மட்டுமே கட்டணமாம்! உங்கள் சேமிப்பு எவ்வளவு என்று பார்க்கக் கால்குலேட்டரைத் தேடறீங்களா? அதையும் நானே சொல்லிடறேனே! ரூ13191/- அதாவது 95 விழுக்காடுங்க!
இந்த ப்ளைட் நம்ம ஊருக்கு எப்ப வருமுன்னுதானே அடுத்துக் கேட்கப் போறீங்க! இப்பதானங்க சோதனை முடிஞ்சு இருக்கு! சீக்கிரமே வருமுன்னு நம்புவோம்! நம்பிக்கைதானே வாழ்க்கை!