
ஒவ்வொருவருக்கும் தினமும் தூக்கத்தில் கனவு வருவது இயல்பு. பல கனவுகள் தூங்கி எழும்போதே பலருக்கும் மறந்து விடும். கனவுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வரும். சில கனவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும், சில கனவுகள் அதிர்ச்சியையும் பயத்தையும் கொடுக்கும். சில நேரம் வரும் பயங்கரமான கனவுகள், மனதின் அமைதியைக் கெடுத்து விடும். பயங்கரமான கனவுகளில் ஒன்று விமான விபத்து ஏற்படுவது போல் காண்பதுதான்.
விமான விபத்து கனவு ஒருவருக்கு நிறைய அச்சத்தைக் கொடுக்கலாம். இது அவரை அமைதியற்றவராகவும் மாற்றலாம். இதுபோன்ற கனவைக் கண்ட பின், அதற்கான பலன் என்னவாக இருக்கும் என்பதை அறிய பலரும் ஆவலாக இருக்கின்றனர். நமக்கு வரும் கனவுகளை வைத்தே அதன் பலனை அறிந்துக் கொள்ளலாம். இதற்காக நமது முன்னோர்கள் ‘ஸ்வப்ன (கனவு) சாஸ்திரம்’ என்ற நூலை வடமொழியில் எழுதியுள்ளனர். இந்த நூல் ஜோதிடம் மற்றும் உளவியல் கலந்த ஒரு சாஸ்திரம். இது நமக்கு வரும் கனவுகளின் பொருளையும் அதன் பின்னால் நடைபெற இருப்பவை பற்றியும் குறிப்பால் உணர்த்துபவையாகும்.
ஸ்வப்ன சாஸ்திரத்தின்படி விமான விபத்து கனவு என்பது தீமையின் அறிகுறியாக இருக்கிறது. இதன் மூலம் அந்தக் கனவு கண்ட நபர் எதிர்வரும் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துகிறது. விமானம் என்பது ஒருவரது வாழ்க்கையின் திட்டங்கள், இலக்குகள், லட்சியங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அதில் விபத்து என்பது ஒருவரது வளர்ச்சியில் ஏற்படும் தேக்கத்தைப் பற்றிக் குறிக்கிறது.
ஒருவரது திட்டம், இலக்கு, லட்சியம் ஆகியவற்றில் நிச்சயமற்ற தன்மை ஏற்படலாம் என்பதை இந்தக் கனவு குறிப்பிடுகிறது. விமானம் தனது கட்டுப்பாட்டை இழப்பதைப் போல அவரும் தனது செயல்பாடுகளில் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம். இதனால் தொழில் முறை வாழ்க்கையில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை ஏற்படலாம்.
விமான விபத்து கனவு எதிர்பாராத மாற்றங்களைக் குறிக்கும். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களுக்கு தயாராக அவர் இருக்க வேண்டும். வரவிருக்கும் மாற்றங்களுக்கு அவர் மனதளவில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள கவனமாக இருக்க அறிவுறுத்துகிறது.
பெரும்பாலும் இதுபோன்ற கனவுகள் ஆழ்மனதின் வெளிப்பாடாக இருக்கலாம். மனதில் உள்ள கவலைகள், பதற்றங்கள், மன அழுத்தம் ஆகியவற்றால் உந்தப்பட்டுக் கூட இதுபோன்ற விபத்து கனவுகள் வரலாம். மனதின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவற்றைச் சரிசெய்ய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இதுபோன்ற கனவுகள் உங்களுடைய ஒரு பெரிய திட்டம் அல்லது லட்சிய திட்டத்தில் தடைகளை சந்திக்க நேரிடும் என்பதற்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.
கெட்ட கனவுகள் என்பது ஒருவரின் மனநிலை சார்ந்ததாக இருக்கிறது. ஒருவரின் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தால் கனவுகளும் நல்லதாகவே இருக்கும். அபாய கனவுகள் வந்தால் பயப்படுவதை விட, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கெட்ட கனவுகள் அவரது வாழ்க்கையின் சூழலுக்கு தகுந்தவாறு பலன் அளிக்கலாம். அதேசமயம், இதுபோன்ற கனவுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்களையும் தருவதில்லை.