

மின்சார வாகனங்களின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக பல நாடுகள், மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2014-15-ம் ஆண்டு நாடு முழுவதும் விற்பனையான மொத்த மின்சார வாகனங்களில் எண்ணிக்கை 0.01 சதவீதம் இருந்த நிலையில் அதுவே 2024-25-ம் ஆண்டு 7.3 சதவீதம் ஆக அதிகரித்து உள்ளது.
தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சார்ஜிங் நிலையங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நாடு முழுவதும் 1,200 சார்ஜிங் நிலையங்கள் இருந்தது. இது கடந்த ஆகஸ்டு மாதம் வரையிலான நிலவரப்படி 30,000 ஆக உள்ளது.
இவற்றில் 15,550 சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் இல்லை என்று அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட 316 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் மட்டுமே உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவான ஆறு முதல் 30 வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் என்ற எண்ணிக்கையை விட மிக அதிகம்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் சார்ஜிங் வசதி கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விதிகளைத் திருத்தி, அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, மின்சார வாகனப் பயன்பாட்டிற்கான உள்கட்டமைப்பை விரைந்து உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் அறிவிப்பின்படி, புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகளுக்கான திருத்தப்பட்ட விதிகளின்படி,
* எட்டு வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் ஆக இருக்க வேண்டும்.
* 50 வீடுகளுக்கும் அதிகமான பெரிய குடியிருப்புகளாக இருந்தால், அங்கே வெளியில் இருந்து வருவோரும் பயன்படுத்தும் வகையில் பொதுவான ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* குடியிருப்புகளைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் மின் வாகன சார்ஜிங் வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, 300 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் ரீசார்ஜிங் வசதி ஏற்படுத்துவது கட்டாயம்.
தமிழக அரசின் இந்த விதித்திருத்தங்கள், மாநிலம் முழுவதும் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், வாகன ஓட்டிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, எதிர்காலத்தில் மின் வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை கணிசமாக உயர்த்தும் என தொழில் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.