2023ஆம் ஆண்டுக்கான எலக்ட்ரிக் வாகன வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2030 ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் வாகன விற்பனை ஆண்டுக்கு 1 கோடி எட்டிவிடும் எனக் கூறியுள்ளார்.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் உலகிலேயே முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. வாகன் தளத்தில் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதுவரை இந்தியாவில் 34 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. நம்மிடம் கிரீன் எனர்ஜியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் போக்குவரத்து சார்ந்த துறையில் சிறப்பாக மாறும் கட்டமைப்பை கொண்டு வரும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.
அதிகப்படியான மாசை வெளியிடும் ஸ்கூட்டர், வாகனங்கள் போன்றவற்றை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் சரக்கு மற்றும் பொதுப் போக்குவரத்துக்கும் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
2023ல் மட்டும் எலக்ட்ரிக் வாகன விற்பனையானது 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 56 சதவீத வாகனங்கள் இருசக்கர வாகனங்கள், 38 சதவீத வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்களாகும். இது எதிர்காலத்தில் மேலும் அதிகரித்து மாசற்ற எரிபொருள் பயன்படுத்தும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கு இயந்திரப் பொருட்களின் விலை, பேட்டரி மற்றும் இறக்குமதி செலவு என அதன் விலை 30 சதவீத வரை கூடுதலாக உள்ளது. ஆனால் வரக்கூடிய ஆண்டுகளில் எல்லா உதிரி பாகங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பதால், பேட்டரி மற்றும் உற்பத்தி செலவு போன்றவை குறைந்து எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறையக்கூடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.