

எக்ஸ் தளம் (முன்னர் டுவிட்டர்) என்பது ஒரு சமூக ஊடகத் தளமாகும். இது பதிவுகளை (posts) இடுவது, மற்றவர்களுடன் உரையாடுவது, செய்திகளைப் பெறுவது, வீடியோக்களைப் பார்ப்பது, பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற பல்வேறு தலைப்புகளில் நிகழ்நேரத் தகவல்களைப் பகிரவும் பெறவும் பயன்படும் ஒரு தளம்.
இந்நிலையில் எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி வருகின்றனர்.
அதாவது, எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்த நிலையில் அது வேகமாக வைரலாகி பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் உள்ள ‘கிரோக்’ ஏஐ செயலி மூலம் பெண்களின் படத்தை ஆபாசமாக மாற்றி சிலர் வெளியிடுவதாகவும், இது போன்ற குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடந்த மாதம் 29-ம் தேதி கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தை எக்ஸ் தளத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற மத்திய அரசு, நம்நாட்டு சட்ட விதிமுறைகளை மீறி ஆபாச படங்கள், வீடியோக்கள், சட்டவிரோத தகவல்கள் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், இவற்றை நீக்கி போலி கணக்குகளை எக்ஸ் தளம் முடக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை அடுத்த 72 மணி நேரத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து , எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரோக் ஏஐ செயலியை பயன்படுத்துபவர்கள், சட்டவிரோத தகவல்கள், வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றக்கூடாது. மீறினால் அவர்களின் கணக்குகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.