

உலகளவில் பயன்பாட்டிற்கு வந்த சிறிது நாட்களிலேயே அதிக அளவில் பிரபலமாகி விட்டது ஏஐ தொழில்நுட்பம். அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஏஐ பயன்படுத்தி மொபைல் செயலியை உருவாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வருகின்ற நவம்பர் 11ம் தேதி தொடங்கிய மூன்று நாட்கள் வரை நடைபெற உள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் இந்தப் பயிற்சி நடைபெற இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளைக் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள நபர்கள், இதில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்னும் சில காலங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்து விடும் என்பதால், பல முன்னணி நிறுவனங்கள் இப்போதே ஏஐ துறையில் வல்லுனர்களை தேடி வருகிறது. அதற்கேற்ப ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு அளிக்கும் இந்தப் பயிற்சி, ஆர்வமுள்ள நபர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
ஏஐ பயிற்சி குறித்த தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் செயலியை உருவாக்கும் பயிற்சியை வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அந்நிறுவன வளாகத்தில், மூன்று நாட்கள் முழுநேர பயிற்சியாக இது நடத்தப்படவுள்ளது.
மொபைல் செயலி உருவாக்கம், வலைதளங்கள், தனிப்பட்ட மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தானியங்கி அமைப்புகள், சில்லறை வணிகம், கல்வி, நிதி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஏஐ தொடர்பான பயிற்சி வழங்கப்படும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஓரளவு கணினி அறிவுடன், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சிக்கு வரும் வெளி மாவட்டத்தினருக்கு குறைந்த செலவில் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்து தரப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள hhtps://www.editn.in என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யலாம். மேலும் 98401 14680 மற்றும் 93602 21280 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நடைபெறும் இடம்:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, EDII அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை.
ஏஐ துறையில் சாதிக்க விரும்பும் நபர்கள் தமிழ்நாடு அரசின் இந்தப் பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இனி வரும் காலங்களில் ஏஐ தொழில்நுட்பம் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை எனற நிலைமை உருவாகும் என்பதால், இந்தப் பயிற்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அடுத்தடுத்த பயிற்சி முகாம்களை அரசு ஏற்பாடு செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.