சமீப காலமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை (Income Tax Department) நோட்டிஸ் அனுப்பி வருகிறது. இதை சாக்காக வைத்து 'வருமான வரித் துறை' என்ற பெயரில் மின்னஞ்சல் (Email) வழியாக பல மோசடிகளும் நடைபெறுகின்றன.
பல்வேறு காரணங்களுக்காக இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்படலாம். சில சமயங்களில், வருமான வரித் தாக்கல் (Income Tax Filing) செய்யும் போது ஏற்பட்ட பிழைகள், அல்லது வருமானத்திற்கும் செலவிற்கும் இடையே உள்ள பெரிய வேறுபாடுகள் போன்ற காரணங்களால் வருமான வரித்துறை விளக்கம் கோரலாம். மேலும், சிலரின் வங்கிக் கணக்குகளில் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் (Transactions) நடந்திருந்தாலும், அதற்குரிய சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாதபோதும் நோட்டீஸ்கள் வரலாம்.
இதுபோன்ற காரணங்களுக்காக வருமான வரித்துறையினர் மின்னஞ்சல்கள் மூலம் நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதன் முதற்படியாக நேற்று பல ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை பயன்படுத்தில் சைபர் குற்றவாளிகள் (Cyber Criminals) வருமான வரித்துறை பெயரில் போலியான மின்னஞ்சல்களை அனுப்பி, மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சிப்பார்கள். இத்தகைய மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை (Links) ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான மெயில்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. "மெயில் வந்தால் உஷாரா இருங்க" என்று நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பினால், முதலில் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்வது அவசியம். வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Official Website) உங்கள் கணக்கில் உள்நுழைந்து நோட்டீஸ் உண்மையானதா என்பதை சரிபார்க்கலாம். ஒருவேளை நோட்டீஸ் உண்மையானதாக இருந்தால், உடனடியாக ஒரு தகுதிவாய்ந்த ஆடிட்டர் (Auditor) அல்லது நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அவர்கள் உங்கள் நிதி ஆவணங்களை சரிபார்த்து, சரியான முறையில் பதிலளிக்க உதவுவார்கள்.
தற்போதைய சூழ்நிலையில், சம்பளதாரர்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்துமாறும், வருமான வரி தொடர்பான ஆவணங்களை முறையாகப் பராமரிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எதிர்பாராத நோட்டீஸ்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம்.