ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் பணி காலத்தின் போது அவரின் கவனக்குறைவால் நிறுவனத்திற்கு நிதி இழப்பு, பணஇழப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த ஊழியரின் ஈட்டுத்தொகை அதாவது கிராஜுவிட்டி தொகையை (gratuity) நிறுத்திவைக்கவும் அல்லது பறிமுதல் செய்யவும் அந்த நிறுவனத்திற்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
நிறுவனங்கள் எடுக்கும் இது போன்ற நடவடிக்கைகள் 1972-ம் ஆண்டின் பணப் பலன் சட்டத்தை (Payment of Gratuity Act) மீறாது என கிராஜுவிட்டி தொடர்பாக வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் லானுசங்கும ஜமீர் மற்றும் ராய் சட்டோபாத்யாய் ஆகியோர் வழங்கிய இந்த தீர்ப்பு பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.
MSTC லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவரின் மீதான வழக்கில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்றம் இப்படியொரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் விசாரணை முடியும் வரை அவரது ஈட்டுத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், ஒழுங்கு நடவடிக்கை ஆணையம், குற்றம்சாட்டப்பட்டவரால் MSTC நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பிற்காக, அவரது கிராஜுவிட்டி தொகையிலிருந்து 10 லட்சம் ரூபாயை வசூலிக்க உத்தரவிட்டதுடன் அவரது மறுஆய்வு விண்ணப்பத்தையும் நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து, ஊழியர் தனது கிராஜுவிட்டி தொகையை கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கோரிக்கை வைத்த போதும் அவரது கோரிக்கையை கட்டுப்பாட்டு ஆணையம் நிராகரித்த நிலையில், அந்த ஊழியர் மேல்முறையீட்டு ஆணையத்திடம் செல்ல, பணப் பலன் சட்டத்தின் கீழ் உள்ள மேல்முறையீட்டு ஆணையம், கட்டுப்பாட்டு ஆணையத்தின் இந்த முடிவை ரத்து செய்ததுடன், ஊழியர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து வட்டியுடன் ஈட்டுத்தொகை தரவேண்டும் என உத்தரவிட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியும் இந்த உத்தரவை உறுதிப்படுத்தினார்.
இந்த உத்தரவால் அதிருப்தி அடைந்த MSTC லிமிடெட், உயர்நீதிமன்றத்தில் இந்த உள்-நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக மேல்முறையீட்டைத் தாக்கல் செய்து, மேலாண்மைப் பணியில் இருந்த ஒருவருக்கு 1972-ம் ஆண்டின் பணப் பலன் சட்டம் பொருந்தாது என்று வாதிடப்பட்டது.
இந்த விதிகள், ஊழியரின் கவனக்குறைவு அல்லது தவறான நடத்தை மூலம் ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்து கிராஜுவிட்டி தொகையை நிறுத்திவைக்க அல்லது திருப்பி பெற நிறுவனத்திற்கு அதிகாரம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஊழியர் சார்பில், தான் ஓய்வு பெற்றவுடன் பணப் பலன் சட்டத்தின் கீழ் கிராஜுவிட்டி தொகை பெற உரிமை உள்ளதாக வாதிடப்பட்டது. மேலும், தனது பணியின் இறுதிக் காலத்தின் பழைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது என்றும், இழப்பு எந்த அளவுக்கு தனது நடத்தையால் ஏற்பட்டது என்பதை கணக்கிடாமல் பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் சார்பில் வாதிடப்பட்டது. மேலும் கொள்முதல் குழுவின் கூட்டு முடிவால் ஏற்பட்ட இழப்பிற்கு, என்னுடைய முழு கிராஜுவிட்டி தொகையையும் பறிமுதல் செய்தது நியாயமற்றது என்றும், சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளுக்கு பறிமுதல் செய்யப்பட்ட கிராஜுவிட்டி தொகை பின்னர் விடுவிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, கிராஜுவிட்டி நிறுத்தி வைக்கப்பட்டதும், திருப்பி பெறப்பட்டதும் சரிதான் என்று உத்தரவிட்டனர். ஊழியரின் கவனக்குறைவால் நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பிற்காக கிராஜுவிட்டி தொகையை (gratuity) நிறுத்திவைக்க அல்லது பறிமுதல் செய்ய நிறுவனங்களுக்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.