தேர்தல் பரப்புரை அனல் பறக்க இருக்கின்ற இந்த நிலையில் திமுக பாக முகவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு காணொளி வாயிலாக தனது இல்லத்திலிருந்து தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில் பாக முகவர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
முதல்முறையாக நவீன தொழில்நுட்பத்தில் 7,500 வாக்குச்சாவடி முகவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடியுள்ளார். இதில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த மசோதா காரணமாக நம் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக்க முயன்ற சதியை நாம் போராடி வென்றோம் என்றும் ஆனால் அவர்கள் இத்துடன் நிறுத்த மாட்டார்கள் எனவும் இன்னும் பல போராட்டங்கள் இருக்கின்றன. இதை மக்களுக்கு நாம் உணர்த்துவதுடன், நாம் வலிமையுடன் போராட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் இந்த இரண்டு நாட்கள் அவரவர் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என்றும், திமுகவுக்கான வாக்குகள் ஒன்று கூட விடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளார். முதியவர்கள், வயதானவர்களை அழைத்துச் சென்று தொடர்ந்து வாக்குச்சாவடி வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தவித விதி மீறலோ, முறைகேடோ நடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு தொடங்கி கடைசி வாக்கு பதிவாகும் வரை வாக்குச்சாவடியிலேயே வாக்குச்சாவடி முகவர்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களால் மக்கள் மத்தியில் நமக்கான ஆதரவு அலையே வீசுகிறது என்றும், ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வரும் பொழுது ஒவ்வொரு தொகுதியாக, வாக்குச்சாவடி வாரியாக நாம் பெற்ற வாக்குகளை அலசி ஆராய்வேன் என்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதேபோன்று ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்று தந்த வாக்குச்சாவடி முகவரை நானே நேரில் சந்திப்பேன் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.