தினகரனை அன்போடு வரவேற்ற எடப்பாடி பழனிசாமி - வலுப்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி..!

ttv
ttvsource:india today
Published on

நீண்ட நாட்களாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய தயக்கம் காட்டி வந்த டிடிவி தினகரன், இன்று (ஜனவரி.21) பாஜக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் , தமிழகத்தில் தினமும் காட்சிகள் மாறிக்கொண்டே வருகின்றன. முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன் , தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ,எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குவது பிடிக்காமல் கூட்டணியில் இருந்து விலகி இருந்தார்.

பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக தினகரனை தொடர்பு கொண்டு கூட்டணிக்கு அழைத்தபோதும் , உடனடியாக எந்த ஒரு முடிவும் தெரிவிக்காமல் இருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக நடிகர் விஜயை ஆதரித்து தினகரன் பேசி வந்தார், இந்நிலையில் தவெக கூட்டணியில் தினகரன் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. செங்கோட்டையனும் தினகரன் பொங்கலுக்கு பிறகு விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவார் என்று பேசி வந்தார்.

தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமியும் தினகரனும் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்ததால் இருவரும் கூட்டணியில் இணைவது சந்தேகமான நிலையில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று வந்த பின்னர், தினகரனை எதிர்த்து பேசுவதை நிறுத்தினார். தினகரனும் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாட்டு வருகையின் போது கூட்டணி கட்சிகள் அனைத்தும் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் தினகரனின் புகைப்படமும் இடம்பெற்றது. இதனால் தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இன்று காலை கூட்டணி தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் அமமுக , தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக தலைவர் டிடிவி தினகரன் அதிமுக– பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். கூட்டணி அறிவித்த உடனேயே பாஜக அலுவலகம் சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.செய்தியாளர்கள் சந்திப்பில் தினகரன், "அதிமுகவுடன் இருப்பது வெறும் பங்காளி சண்டை மட்டும்தான் , என்றும் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை" என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பதிவை X தளத்தில் இட்டுள்ளார். அந்தப் பதிவில் "தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் " என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தனக்கு வரவேற்பு தெரிவித்ததற்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டணியில் அமமுக கட்சிக்கு 8 லிருந்து 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
#BREAKING: திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வைத்திலிங்கம்.!
ttv

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com