

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் முன்னணி கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் காலை 9 மணியளவில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை அறிவாலயம் திரும்பிய வைத்திலிங்கத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்றார். இந்நிலையில் சற்றுமுன் திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வைத்திலிங்கம்.
ஏற்கனவே எம்எல்ஏ வைத்திலிங்கம் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வலம் வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு திமுகவில் இணைந்துள்ளார் வைத்திலிங்கம்.
அதிமுக கட்சியில் இருந்து செங்கோட்டையன் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினரும் விரைவில் இணைவார்கள் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் பொங்கலுக்குப் பிறகும் ஓபிஎஸ் தனது கூட்டணி குறித்த தகவலை அறிவிக்காத நிலையில், இவருடைய ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிகளில் இணைய திட்டமிட்டனர். அவ்வகையில் ஏற்கனவே மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது ஒரத்தநாடு எம்எல்ஏ-வான வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்துள்ளார்.
தற்போது ஓபிஎஸ் அணியில் இரண்டு சட்டமன்ற எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பு பலவீனம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி குறித்த முடிவை எடுப்பதில் ஓபிஎஸ் தயங்குவதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வைத்திலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்தபோது தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரும் அரசியல்வாதியாக இருந்தார் வைத்திலிங்கம். இந்நிலையில் இவருடைய வரவு தஞ்சை மாவட்டத்தில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு பலவீனமாக இருக்கும் நிலையில் தற்போது மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரின் இழப்பு அவருக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும் ஓபிஎஸ் தனது கூட்டணி குறித்த முடிவை விரைவில் அறிவிக்காவிடில் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் எம்எல்ஏ வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாகவே கருதப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் தரப்பை தவெக-வில் இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வரும் நிலையில், அதற்கு தகுந்த பலன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பதை விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஓபிஎஸ் இடம் தற்போது இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால், மற்ற கட்சிகளில் கூட்டணியில் சேர்ந்தாலும் கூட அவருக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.