Epstein Files
Epstein Files

விஸ்வரூபம் எடுக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் - உலகப் பிரபலங்களின் முகத்திரை கிழிகிறதா..??

Published on

சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் "Jeffrey Epstein" மற்றும் "Epstein Files" என்ற வார்த்தைகள் அதிகம் அடிபடுவதைப் பார்க்கிறோம். பல வருடங்களுக்கு முன்பு இறந்த ஒரு நபரின் பெயர் இப்போது ஏன் இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். உலகின் மிகப்பெரிய பாலியல் கடத்தல் வழக்குகளில் ஒன்றான இதில், அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி உலகின் பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் அடிபடுவதுதான் இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம். 

ஜெஃப்ரி எப்ஸ்டீன் - அறிமுகம்!

நியூயார்க்கில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், பின்னர் பங்குச் சந்தை உலகில் நுழைந்து பெரும் செல்வந்தராக உயர்ந்தார். பணம் படைத்த பலருடன் நட்பு பாராட்டி, தனது தொடர்புகளை விரிவுபடுத்தினார். ஆனால், இந்த ஆடம்பர வாழ்க்கைக்குப் பின்னால் ஒரு இருண்ட பக்கம் இருந்தது. சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

2008 ஆம் ஆண்டு முதல்முறையாக சிறை தண்டனை பெற்றாலும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மிகக் குறைந்த தண்டனையுடனும், பல சலுகைகளுடனும் வெளியே வந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உண்மைகள்!

எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய தொகுப்பே "எப்ஸ்டீன் ஃபைல்ஸ் (Epstein Files)" என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க நீதிமன்றம் அண்மையில் இந்த ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிட்டது. 

இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப், பில் கிளிண்டன், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, தொழிலதிபர் எலான் மஸ்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் என பலரது பெயர்கள் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.

இந்தியத் தொடர்பு!

சமீபத்தில் வெளியான இந்த ஆவணங்களில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக இந்தியக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஆனால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. எப்ஸ்டீன் ஃபைல்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் குற்றவாளிகள் என்று அர்த்தமல்ல.

ஆனால், எப்ஸ்டீனுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்பு மற்றும் பயணம் ஆகியவை சந்தேகத்தை எழுப்புவதாக அமைந்துள்ளன. சிலர் எப்ஸ்டீனின் குற்றங்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர், சிலர் அவருடனான நட்பிற்காக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
"இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்!"
Epstein Files

நீதிக்கான போராட்டம்!

எப்ஸ்டீன் இறந்துவிட்டாலும், அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்றும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எப்ஸ்டீனின் கூட்டாளியாகச் செயல்பட்ட கிஸ்லைன் மேக்ஸ்வெல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனாலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற பெரிய புள்ளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. பணம் மற்றும் அதிகார பலம் இருந்தால் எதையும் மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை இந்த வழக்கு உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் தனிப்பட்ட ஒரு நபரின் குற்றம் மட்டுமல்ல, அது அதிகார வர்க்கத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒன்று. இந்த ஆவணங்கள் முழுமையாக வெளிவரும்போது இன்னும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவரலாம். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்க, இந்த வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 

இதையும் படியுங்கள்:
நமக்கானது நம்மிடம் வந்து சேரும்! அதுவரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்!
Epstein Files

அதுவரை, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்ந்து உலக அரசியலிலும், சமூகத்திலும் ஒரு புயலைக் கிளப்பிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

logo
Kalki Online
kalkionline.com