இந்தியாவின் பிரபல மசாலா நிறுவனமான எவரெஸ்ட் மசாலா பொருட்களுக்கு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளில் தடை விக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மசாலா பாக்கெட்டுகளில் அதிகப்படியான எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வேகமாக பரவியதையடுத்து எவரெஸ்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவின் மசாலா பொருட்கள் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானவையாகும். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அப்படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்வதில் மிகப் பிரபலமாக இருப்பவை எவரெஸ்ட் மற்றும் எம்டிஎச் பிராண்டுகள்தான்.
இந்த இரு நிறுவனங்களின் சில மசாலா பொருட்களுக்கு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உணவு கட்டுப்பாடு அமைப்பு தடை விதித்துள்ளது. இவர்களது மசாலா பொருட்களில் அனுமதித்த அளவைவிட அதிகப்படியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகவும், இதை மக்கள் பயன்படுத்தினால் கேன்சர் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மசாலா பொருட்களில் ஏன் எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது?
எத்திலீன் ஆக்சைடு என்பது நிறமற்ற வாயுவாகும். இது பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களுக்கு கிருமி நீக்க முறைகளில் பயன்படுத்தப்படும். மசாலா பொருட்கள் என்று வரும்போது, அவற்றில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளைக் கொல்ல இந்த வாயு பயன்படுத்தப்படலாம். இப்படி செய்யும் போது மசாலா பொருட்களின் ஆயுள் நீடித்து விரைவில் கெட்டுப் போவது தடுக்கப்படும். இருப்பினும் உணவுப் பொருட்களில் இவற்றை பயன்படுத்துவது பல நாடுகளில் உணவுப் பாதுகாப்பு அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால், உணவுப் பொருட்களில் இதன் அளவு அதிகமானால், பல உடல் பாதிப்புகளுக்கு வழி வகுக்கலாம்.
எவரெஸ்ட் நிறுவனத்தின் விளக்கம்: இணையத்தில் எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலா பொருட்கள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டதாக பரவியதைத் தொடர்ந்து, எவரெஸ்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. “எந்த நாட்டிலும் எவரெஸ்ட் நிறுவன பொருட்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை. ஹாங்காங்கில் ஒரு குறிப்பிட்ட மசாலா வகையை மட்டும் வாபஸ் பெற வேண்டி அறிவுறுத்தியுள்ளனர். இதை மேற்கோள் காட்டியே சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்பு ஆணையம் அதே கோரிக்கையை வைத்துள்ளது. மேலும் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
எங்கள் நிறுவனம் 60க்கும் மேற்பட்ட மசாலாக்களை ஏற்றுமதி செய்கிறது. இதில் ஒரு மசாலாவுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நிறுவன மசாலா பொருட்கள் அனைத்துமே உயர்ந்த தரத்தைக் கொண்டது என்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை” என எவரெஸ்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்திய மசாலா பொருட்கள் மீது வெளிநாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் எல்லா நிறுவன மசாலா பொருட்களின் மாதிரிகளையும் ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.