சைபர் மோசடியில் ₹8 கோடி பணத்தை இழந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி, துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை தலைவரான (DIG) அமர்சிங் சாஹல், நேற்று பாட்டியாலாவில் உள்ள தனது இல்லத்தில் துப்பாக்கியால் மார்புப் பகுதியில் சுட்டுக்கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கி சத்தத்தைக் கேட்டு அந்த இடத்தை வந்து பார்த்தவர்கள் பலத்த காயத்துடன் இருந்த சாஹலை மருத்துவமனையில் சேர்த்தனர். அமர்சிங் சாஹல் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதை அதிகாரிகள் கைப்பற்றினர். சாஹல் சமீபத்தில் ஒரு whatsapp குழுவில் சேர்ந்ததாகவும், அந்த குரூப்பில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பணம் போட்டால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் மோசடி குறித்து அவர் எழுதியுள்ள 12 பக்க கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பெயர்களையும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த கடிதத்தை அவர் தனது நண்பர்கள், பஞ்சாப் டிஜிபிக்கும் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தை தான் சோகம் மற்றும் விரக்தியுடன் எழுதிக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
மேலும், ஈக்விட்டி அட்வைசர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அவர் சுமார் ரூபாய் 8.10 கோடி அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை இக்கடிதத்தின் மூலம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து தனக்கு எச்சரிக்கை உணர்வு இல்லாதது பற்றி தனது வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார். தொடக்கத்தில் whatsapp மற்றும் telegram குரூப்புகள் நன்றாக ஆக்டிவேட் ஆக இருந்தது என்று கூறியிருக்கும் அவர் பங்குச்சந்தையில் பெருமளவிலான பணம் சம்பாதித்து தருவதாகவும் அது மத்திய அரசு மற்றும் செபியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குழு என்றும் மோசடி பேர்வழிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அக்டோபர் 28-ஆம் தேதி தனியார் வங்கி அதிகாரி என அறிமுகமான ஒருவர், பங்குச்சந்தை குறித்துத் துல்லியமாக விளக்கித் தன்னை நம்ப வைத்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சாஹல், இந்தச் சிக்கலான சைபர் மோசடியைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அல்லது சி.பி.ஐ (CBI) மூலமே கண்டறிய முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மோசடி செய்பவர்களை பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை அறிவுறுத்தும் அவர் மோசடி பேர்வழிகளின் திட்டத்திற்கு தான் இரையாக்கிவிட்டதால்,தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதை தவிர வேறு வழி தனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனது பாதுகாவலர் நல்லவர் என்றும் தன்னிடம் தனிப்பட்ட ஆயுதம் எதுவும் இல்லாத நிலையில் அவருடைய துப்பாக்கியை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இந்த தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக பாட்டியாலாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தற்கொலை முயற்சிக்கு முற்பட்ட சாஹல் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி ஃபரீத் கோர்ட் மாவட்டத்தில் உள்ள கோட் கபுரா மற்றும் பெஹ்பால் கலவரத்தில் அமைதியாக போராடிய சீக்கியர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர்.
சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் சாஹல், மறைந்த முன்னாள் முதல்வர் பிரகாஷின் பாதல், அவரது மகனும் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல், முன்னாள் டிஜிபி சுமேத் சிங் சைனி, ஐஜிபி பரம்ராஜ் சிங் முன்னாள் எஸ்எஸ்பிக்கள் உள்ளிட்டோர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.