சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, அந்நாட்டின் முன்னாள் விவசாயம் மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை அமைச்சருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக அறிவித்துள்ளது. பெரும் தொகையை லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வடகிழக்கு மாகாணமான ஜிங்லினில் உள்ள நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் டாங்க் ரென்ஜியானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தண்டனையை விதித்துள்ளது.
நீதிமன்றத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, "2007 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், டாங்க் ரென்ஜியான் தனது பல்வேறு பதவிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தி, வணிகச் செயல்பாடுகள், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் வேலைவாய்ப்பு மாற்றங்கள் போன்ற விஷயங்களில் மற்றவர்களுக்கு உதவியுள்ளார்." என்று தெரிவித்துள்ளது.
இந்த உதவிகளுக்காக டாங்க், மொத்தம் 268 மில்லியன் யுவானுக்கும் அதிகமான பணத்தையும் விலைமதிப்பற்ற பொருட்களையும் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இது தோராயமாக 37.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமம் என்று சின்ஹுவா கூறுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு, கடந்த ஆண்டு மே மாதம் டாங்க் ரென்ஜியான் மீது ஒழுங்குமுறை மற்றும் சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அறிவித்தது.
அப்போது அவர் விவசாயம் மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
சீன அதிகாரிகள், உயர் மட்ட அரசு மற்றும் இராணுவ பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பிற சந்தேகத்திற்கிடமான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சீன நிபுணர்கள் கருத்துப்படி, ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் தலைமைப் பகுதி, கட்சிக்குள் ஒழுக்கத்தை இறுக்கமாக்கவும், அதன் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் விளைவுகளை மக்களுக்குக் காட்டவும் முயற்சித்து வருகிறது.