மொபைல்போன் பயன்பாடு அதிகரித்து விட்ட இன்றைய காலகட்டத்தில், அதனைக் குறைப்பது என்பது அசாதாரண விஷயமாக மாறி விட்டது. இளம் தலைமுறையினர் பலரும் இரவு நேரங்களில் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மொபைல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் போன் தேவை அதிகம் என்பது உண்மை தான். இருப்பினும் அதன் பயன்பாட்டு அளவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அதிக அளவிலான மொபைல் போன் பயன்பாடு, நம் உடல்நலத்தை பாதிப்பதோடு, நம்முடைய இயல்பான வாழ்க்கையையும் பாதிக்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் மொபைல்போனையே தங்கள் உலகமாக நினைக்கின்றனர். அனைத்து தகவல்களும் மொபைல் போனில் கிடைத்து விடுகிறது. இருப்பினும் அதனை அதிக நேரம் பயன்படுத்துவது தவறான செயல். தற்போதைய சூழலில் குழந்தைகள் கூட மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை மனரீதியாக தடுக்கிறது; அவர்களின் கவனச் சிதறலை அதிகரிக்கிறது.
தற்போது சமூக வலைதளங்களில் வரும் ஷார்ட்ஸ் வீடியோக்களை அதிகம் பேர் பார்க்கின்றனர். இதற்காகவே பலரும் அதிக நேரத்தை மொபைல் போனில் செலவிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இரவு நேரத்தில் நம் உடல் சமநிலையை பெற வேண்டுமெனில் தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை தர வேண்டியது அவசியம். ஆனால் இன்றைய சூழலில் பலரும் இரவு நேரங்களில் தூக்கத்தை தவிர்த்து விட்டு மொபைல் போனை பார்ப்பது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தூக்கம் வரும் வரை மொபைல் போனை பார்த்துக் கொண்டே இருப்பதால், நமது மூளையின் செயல்பாடும், சுரப்பிகளின் செயல்பாடும் பாதிக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியம். இரவு நேரங்களில் மொபைல் போனை பயன்படுத்தும் பலரும் அதிக நேரம் தூங்குவதில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக உடல் பருமன், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. பொழுது போக்கிற்காக மொபைல் போனை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு, அந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் அல்லது ஓய்வு எடுப்பதே சிறந்தது.
இரவு நேரத்தில் அதிக நேரம் மொபைல் ஸ்க்ரீனை பார்ப்பதன் மூலம் அதிலிருந்து வெளிவரும் நீல நிற கதிர்வீச்சு நம் மூளையை அதிக அளவில் பாதிக்கிறது. மேலும் அந்த வெளிச்சத்தின் காரணமாக இன்னும் இரவு நேரம் வரவில்லை என்பதை மூளை தவறாக புரிந்து கொண்டு தூக்கத்தை தள்ளிப் போடும்.
இரவில் அதிக நேரம் மொபைல் போனை பார்ப்பதால் தூக்கமின்மை இதய பாதிப்புகள் உடல் பருமன் மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 மணி நேரத்திற்கு பிறகு கூடுதலாக மொபைல்போனை பார்க்கும் ஒவ்வொரு மணி நேரமும் ஆபத்து தான். இதனால் ஆண்களிடம் மூர்க்கத்தனமும், பெண்களிடம் பதற்றம் மற்றும் மனச்சோர்வும் 10% அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மொபைல்போன் பயன்படுத்துவதை குறைக்க செய்ய வேண்டியவை:
1. முதலில் அதிக நேரம் டிவி மற்றும் மொபைல்போன் ஸ்கிரீனை பார்ப்பதை தடுக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு பிடித்தவற்றின் மீது கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
2. மொபைல் போன் பார்க்கும் நேரத்தை தூங்குவதற்கான நேரம் அல்லது ஓய்வு எடுப்பதற்கான நேரமாக மாற்றிக் கொள்வது சிறந்தது.
3. பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
4. இரவு 9 மணிக்கு மேல் டிவி மற்றும் மொபைல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
5. சில மொபைல் செயலிகளைப் பயன்படுத்தும் போது, எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதை கண்காணித்து பயன்படுத்த வேண்டும்.
6. குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க, பெற்றோர்கள் அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டியது அவசியம்.