லோக்சபா தேர்தலினால் சில நாட்களுக்கு முன்னர் நடத்தை விதிகள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டன. அந்தவகையில் தற்போது இன்றுடன் அந்த விதிகளை விலக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்பின்னர், உடனே நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டன. விதிகளின்படி, ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனவே பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் என ரூ.1,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட பொருட்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே பிரச்சாரங்கள் முடிவடைந்தன. தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பறக்கும் படையினரின் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்தவகையில் ஜூன் 6 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.