இந்திய நாடாளுமன்றத்துக்கு புதிய அமைச்சரவை அமைய உள்ளதை அடுத்து நரேந்திர மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கான கடிதத்தை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முறைப்படி அளித்தார் மோடி. இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், அடுத்த அரசு அமையும் வரை அவரை காபந்து பிரதமராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய மக்களவையை முடிவுக்குக் கொண்டு வருவது என தீர்மானிக்கப்பட்டது. இனி அடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான திட்டங்களை பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்ய உள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் மக்களவையின் புதிய தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கிய பின்னர், வரும் சனிக்கிழமை மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்பார் என்று கூறப்படுகின்றன. அதையடுத்து, இம்மாத கடைசி வாரத்தில் புதிய எம்பிக்களின் பதவியேற்பு இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், நாளை மீண்டும் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார் நரேந்திர மோடி. முன்னதாக இன்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கியத் தலைவர்களாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரும் கலந்துகொள்ள இருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் இவ்விரு தலைவர்களும் வைக்கப்போகும் கோரிக்கை மற்றும் நிபந்தனைகள் என்ன என்பதை இந்திய அரசியல் வட்டாரமே பெரிதாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த கோரிக்கை மற்றும் நிபந்தனையில் பல்வேறு முக்கியமான முடிவுகளும் கசப்பு மற்றும் இனிப்பான விஷயங்களும் இருக்கலாம் என்பது பலரது அனுமானமாகவும் உள்ளது. எது எப்படியாயினும் இம்முறை தனிப்பெரும்பான்மை ஆட்சியாக இல்லாமல் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாகவே அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.