
கடந்த 2022-ம் ஆண்டு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. அதனைதொடர்ந்து, 2-வது கட்டமாக 2023-ல் திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியிலும், 3-வது கட்டமாக 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாணவ-மாணவியர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்களின் பசியாறுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவதும் களையப்பட்டதுடன் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்மை திறன் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 4-வது கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில்(1 முதல் 5-ம் வகுப்பு வரை) பயிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் இன்று (ஆகஸ்ட் 26-ம்தேதி) காலை 8.30 மணியளவில் மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்க உள்ளார்.
4 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் தற்போதுவரை 34 ஆயிரத்து 987 பள்ளிகள் சேர்க்கப்பட்டு 17 லட்சத்து 53 ஆயிரத்து 257 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். 5-வது கட்டம் தொடங்கப்பட்டதும் இனி சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயனடைவர்.
இன்று நடைபெற உள்ள முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.