

கடந்த நவம்பர் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகே ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 13 பேர் பலியான நிலையில், இது ஒரு பயங்கரவாத செயல் என மத்திய அரசு அறிவித்தது. காரில் வெடிபொருட்களை வைத்து திட்டமிட்டு விபத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் அகமது தான் என விசாரணையில் தெரிய வந்தது. இந்த வெடி விபத்து தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 360 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்துகளை தடவியல் ஆய்வாளர்கள் சோதனை செய்து கொண்டிருந்த போது திடீரென வெடித்து சிதறியதால், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவமே இன்னும் முடிவுக்கு வராத சூழலில், மீண்டும் காவல் நிலையத்தில் வெடி பொருட்கள் வெடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை வெடி விபத்துக்கு பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட 360 கிலோ வெடி மருந்துகள், ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. இந்த வெடி மருந்துகளை ஆய்வு செய்ய தடவியல் நிபுணர்கள் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர்.
நேற்று இரவு வெடி மருந்துகளை ஆய்வு செய்து கொண்டிருந்த போது, அவை வெடித்ததால் தடவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 27-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நுண்ணறிவு ஆய்வகத்திலிருந்து 3 பேர், வருவாய் துறையிலிருந்து 2 பேர், காவல்துறையின் 2 புகைப்படக் கலைஞர்கள், மாநில விசாரணை முகமைக்கு சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு தையல்காரர் ஆகியோர் உள்பட மொத்தம் 9 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதுவரை எட்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் நடைபெற்று வருகின்றன.
காவல் நிலையத்தில் நடந்த வெடிவிபத்து குறித்து லடாக் துணை ஆளுநர் கவிந்தர் குப்தா இன்று காலை கூறுகையில், “ஸ்ரீநகரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட துயரமான வெடிவிபத்து எனை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கல்கள், மேலும் காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.