நடப்பு கல்வியாண்டில் தமிழகத்திற்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்கீடு செய்ய தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் இடங்கள் பெற்ற கல்லூரிகள்:
பாரத் மருத்துவக் கல்லூரி
ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி
ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி
சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி
வேல்ஸ் மருத்துவக் கல்லூரி
இந்த ஏழு தனியார் கல்லூரிகளுக்கும் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 350 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. அதே சமயம், பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரியில் இருந்த 150 எம்பிபிஎஸ் இடங்களில் 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 இடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டதால், எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 19ஆம் தேதி முடிவடைவதாக இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் இடங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டிய காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துடன் சேர்த்து, நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 6,850 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,23,700 ஆக உயர்ந்துள்ளது.
போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், நாடு முழுவதும் 1,056 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 இடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த கூடுதல் இடங்கள், மருத்துவப் படிப்பு கனவுடன் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளமான nmc.org.in -இல் எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.