ஆதவ் அர்ஜூனா சொன்னது உண்மையா? இந்தியாவிலேயே 3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்யா?

இந்தியாவிலேயே 3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் தான் என்று ஆதவ் அர்ஜூனா கூறியது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Cm vijay, Aadhav Arjuna
முதலமைச்சர் விஜய், Aadhav Arjuna
Updated on

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்துடன், 'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்' (Start Run Stop Drugs) என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உற்சாகமாக நடைபெற்றது. சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, விழிப்புணர்வு வாசகப் பலகையில் விளையாட்ட எடு Drug-யை விடு என எழுதி, கையெழுத்திட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், நான் முழுமையாக அறிவேன். நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

போதைப்பொருட்களின் உற்பத்தில் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கை மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதியளிக்கிறேன் என்று உறுதி மொழி ஏற்று மாரத்தானை தொடங்கி வைத்தார்.

அதன்பின், வெறும் தொடக்க நிகழ்வில் மட்டும் பங்கேற்றதுடன் நிற்காமல், மாரத்தானில் முதல் ஆளாக கலந்து கொண்டு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து 3 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஓடினர்.

மேலும் இந்த மாரத்தானில் மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் திரண்டிருந்தனர். அனைவருடனும் இயல்பாக கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், பின்னர் அவர்களுடன் இணைந்து மாரத்தானில் ஓடியது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.

கண்ணகி சிலை வரை சென்று U turn எடுத்து மீண்டும் அதே சாலையில் 6 கிலோமீட்டர் தூரம் நடந்த மாரத்தான் ஓட்டம், தீவுத்திடலில் நிறைவு பெற்றது. இதில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமை மட்டுமல்ல, அது சமூகத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பு என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விழிப்புணர்வு மாரத்தான் சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதலமைச்சர் விஜய் பொதுமக்களுடன் இணைந்து ஓடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வேகமாக பகிரப்பட்டு, போதைப்பொருள் ஒழிப்புக்கான இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் இந்த விழாவில் மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு பதக்கங்களை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதலமைச்சரின் பங்கேற்பை வெகுவாக பாராட்டினார்.

அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் முதல்முறையாக போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஓட்டத்தில் முதலமைச்சரே பங்கேற்று உள்ளார். தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக போதை பொருளால் பல பிரச்சனைகள்தான். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் விஜய்
Anti Drug Awarenessimage credit-salarnews.in

இதுவரைக்கு இருந்த முதலமைச்சர்களிலேயே ஒரு மாரத்தானில் கலந்து கொண்டு, 3 கிலோ மீட்டர் வரை ஓடிய ஒரே முதலமைச்சர் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஜோசப் விஜய் அண்ணன் தான். வேறு எந்த முதலமைச்சரும், தமிழ்நாடு வரலாற்றில் மாரத்தான் ஓடியது கிடையாது என தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வை வெறும் பேச்சில் மட்டும் அல்லாமல், செயலிலும் காட்டியுள்ளார். இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே 3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் தான் என்று ஆதவ் அர்ஜூனா கூறியது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் உண்மையான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது, இந்தியாவிலேயே 3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய் கிடையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழக வரலாற்றில் முதல்முறை: மாரத்தானில் களமிறங்கிய போதை ஒழிப்பு நாயகன்.!
Cm vijay, Aadhav Arjuna

உண்மையில், விஜய்க்கு முன்னதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா 21 கி.மீ வரை மாரத்தான் ஓடியுள்ளார். அதாவது, 2024-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்ற உமர் அப்துல்லா, அதே ஆண்டில் அக்டோபர் 20-ம்தேதி இந்தியா மற்றும் 12 வெளிநாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்களுடன் இணைந்து 21 கி.மீட்டர் வரை மாரத்தான் ஓடியுள்ளார். 54 வயதான உமர் அப்துல்லா 21 கிமீ தூரத்தை சுமார் 1.50 மணி நேரத்தில் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்பாக 13 கிமீ மாரத்தான் போட்டியிலும் உமர் அப்துல்லா பங்கேற்று இருக்கிறார். மேலும், பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் உமர் அப்துல்லா. அதனைத்தொடர்ந்து இந்தாண்டு நடைபெற்ற மாராத்தானிலும் கலந்துகொண்டு 21.1 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்தார்.

உமர் அப்துல்லா மட்டுமில்லாமல், ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் போன்றவர்கள் மாரத்தான் ஓடியதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்..!
Cm vijay, Aadhav Arjuna

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இந்தியாவிலேயே 3 கி.மீட்டர் மாரத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய் தான் என தவறான தகவலை கூறியுள்ளார். இதன்பிறகு, ஆதவ் அர்ஜூனாவே அதனை சரி செய்து கொண்டு, தமிழகத்தில் ஒரே முதலமைச்சர் என கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com