குடியாத்தம், பிச்சனுார்பேட்டை, மேல்சுதந்திர வீதியைச் சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி பிரியங்கா(25). இவர் சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டு உள்ளார். இதையடுத்து பிச்சனுார், அரசமர தெரு அருகே தனியார் கிளினிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பிரியங்காவை பரிசோதித்த டாக்டர் அவருக்கு ஊசி மற்றும் ட்ரிப்ஸ் (குளுக்கோஸ்) ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டுக்கு வந்த பிரியங்காவுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாகி மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடலை குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து கடந்த 20ம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என்றும், இதனால் தான் பிரியங்கா இறந்தார் என்றும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வைரலானது. இதையடுத்து மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் தலைமையிலான குழுவினர் மற்றும் டிஎஸ்பி ராமச்சந்திரன் உள்பட போலீசார் தனியார் கிளினிக் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் சில ஆவணங்களை கைப்பற்றினர்.
விசாரணையில் அவர் வாரியார் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் மனைவி பிரியா(40) என்பதும், அவர் டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த பிரியா தலைமறைவாகிவிட்டார். அரசு மருத்துவமனை சார்பில் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பிரியாவை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலுார், தோட்டப்பாளையத்தில் உள்ள தோழி வீட்டில் பிரியா தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் தோட்டப்பாளையத்துக்கு விரைந்து சென்று பிரியாவை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் வட்டாரத்தில் கேட்டபோது அவர்கள் அளித்த தகவல்:
அடக்கம் செய்யப்பட்ட பிரியங்காவின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக தாசில்தாரிடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று பிரேத பரிசோதனை நடக்கவில்லை. இது குறித்து போலீஸ் மற்றும் வருவாய் துறையினரிடம் விசாரித்தபோது, நாளை 24 ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.