

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல்கள், பண மோசடியிலும் ஈடுபட்டு வருகின்றன. அதோடு சமூக வலைதளங்களில் அதிகளவில் போலி விளம்பரங்களும் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவம் சார்ந்த போலி விளம்பரங்கள் மற்றும் முகவரி இல்லாத விளம்பரங்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஹோமியோபதி, சித்தா மற்றும் யுனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளை பரிந்துரைக்கும் வீடியோக்கள் அதிகம் வருகின்றன. ஆனால் இது போன்ற போலி விளம்பரங்களில் மொபைல் நம்பர் மட்டுமே இருக்கும்; முகவரி இருக்காது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை சுயமாக பின்பற்றுவது தவறான செயலாகும். முறைப்படி பாரம்பரிய மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பது தான் சரி.
சமீபத்தில் மதுரையில் யூடியூப் வீடியோவைப் பார்த்து உடல் எடையைக் குறைக்க வெங்காரம் சாப்பிட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவர் அறிவுறுத்தல் இன்றி எவ்வித பாரம்பரிய மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆயுஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கையில், “பாரம்பரிய மருத்துவ விளம்பரங்களும், தனிநபர் மருத்துவர்கள் வெளியிடும் விளம்பரங்களும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சமூக வலைதளங்களில் இதுபோன்ற போலியான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக இருக்கிறது. ஆனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
பெரும்பாலான விளம்பரங்களில் மொபைல் எண் மட்டுமே இருக்கும். அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு அழைத்தாலும் முகவரியை தர மறுக்கிறார்கள். இதுபோன்ற போலியான விளம்பரங்களை பொதுமக்கள் நம்புவதை முதலில் நிறுத்த வேண்டும். இனி பொதுமக்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் வரும் பாரம்பரிய மருத்துவ முறைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம்.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆயுஷ் மருத்துவர்களை தொடர்பு கொண்டு, கலந்தாலோசிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய சித்த மருத்துவம் தொடர்பான மருந்துகளை சமூக வலைதளங்களில் பரிந்துரைப்பதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற போலியான விளம்பரங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
குறிப்பாக உடல் எடை குறைப்பு மற்றும் ஆண்மை குறைபாடு ஆகியவற்றிற்கு தான் சமூக வலைதளங்களில் அதிக அளவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற போலியான விளம்பரங்களில் இருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.