

இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கந்து வட்டி கும்பலின் அட்டகாசம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கந்து வட்டி என்பது சட்டவிரோதமாக, மிக அதிக வட்டி விகிதத்தில் அதாவது மீட்டர் வட்டியில் கடன் கொடுப்பவர்கள். இவர்கள் கடனுக்கான வட்டியை கொடுக்காதவர்களிடம் மிகக் கடுமையான முறையில் வசூலித்து, கடனாளியைத் துன்புறுத்துவார்கள். அதாவது அசல் மற்றும் வட்டியைத் திரும்பப் பெற, மிரட்டல், அத்துமீறல் போன்ற சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துவார்கள். ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர மக்களும் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள். சிலர் கந்து வட்டிக்காரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படியே இவர்கள் மீது புகார் அளித்தாலும் ஒரு சில வழக்குகளில் மட்டுமே, கந்து வட்டிக்காரர்கள் பிடிபட்டு சட்டத்தின்படி தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்த பிறகு மீண்டும் தங்கள் கந்து வட்டி தொழிலைச் செய்து ஏழைகளைத் துன்புறுத்தத் தொடங்குகிறார்கள்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கிய கடனுக்காக விவசாயியின் ‘கிட்னி’யை கந்துவட்டி கும்பல் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள மின்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான சதாசிவ் குடே. விவசாயியான இவர் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக பால் வியாபாரம் செய்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டு கந்துவட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் பால் வியாபாரத்திலும் சதாசிங்குக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் சதாசிவ், தன்னிடமுள்ள டிராக்டர் , விவசாய நிலம், வீட்டில் இருந்த பொருட்கள், நகைகள் என எல்லாவற்றையும் விற்பனை செய்து கடனை கொடுக்க முயன்றார். ஆனால் அவர் வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடன் வட்டி, குட்டி போட்டு 74 லட்சம் ரூபாயாக மாறியது. விவசாயியின் இக்கட்டான சூழலைப் பயன்படுத்திக் கொண்ட கந்துவட்டிக்காரர்கள், பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து துன்புறுத்தத் தொடங்கியதுடன், சட்டவிரோதமான வட்டி விகிதங்களை விதித்துள்ளனர்.
மேலும் கந்து வட்டி கும்பல், கடனை அடைக்க சதாசிவ்கின் சிறுநீரகத்தை விற்குமாறு வற்புறுத்த தொடங்கி உள்ளனர். கந்து வட்டிக்காரர்களின் துன்புறுத்தலால் வேறு வழியின்றி சம்மதித்த அவரை ஏஜெண்ட் மூலம் கடந்த ஆண்டு கம்போடியாவுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஒரு சிறுநீரகத்தை அகற்றி ரூ.8 லட்சத்திற்கு விற்றுள்ளனர். இவ்வளவு செய்தும் இன்னும் கடன் தீரவில்லை எனக் கூறி கந்துவட்டி கும்பல் அவரை மிரட்டி உள்ளது.
மேலும் கடனை அடைக்க கொத்தடிமையாக வைத்து சாகும் வரை வேலை செய்ய வேண்டும் என ஏஜெண்டுகள் கூறிவிட்டார்களாம். இதற்கிடையே அங்கிருந்து வர முடியாமல் தவித்த அவர், ஒரு வழியாக வாட்ஸ் அப் மூலம் பிரம்மபுரி தொகுதி எம்எல்ஏ விஜய் வடெட்டிவாருக்கு தகவல் கொடுத்து அரசு ரீதியாக அழுத்தம் தந்த நிலையில் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.
ஊர் திரும்பிய விவசாயி தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்து போலீசில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 20 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.