

கண்கள் இல்லையென்றாலும் மனக்கண்ணால் பார்க்கலாம். ஆனால், மனக்காது என்று எதுவும் இல்லை. பார்வையற்றவர்கள் மீது மக்கள் அனுதாபம் கொள்கிறார்கள்; ஊமைகளை அன்புடனும் அக்கறையுடனும் நடத்துகிறார்கள். கால், கை ஊனமுற்ற நபரை அரவணைக்க தயாராக உள்ளனர். ஆனால், காது கேளாதவர் என்று வரும்போது அவரை ஜனங்கள் கேலி செய்கிறார்கள். ஒரு பார்வை அற்றவர் தன் காதுகளால் பார்க்க முடியும். ஆனால், பாவம் ஒரு காது கேளாதவறால் தன் கண்களால் கேட்க முடியாது.
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு வயதான பெண்மணி இருந்தார். அவர் அடியோடு பார்வையற்றவர். ஆனால், அவருக்கு அற்புதமான செவித்திறன் இருந்தது. கிட்டத்தட்ட எறும்பு கொட்டாவி விட்டால் கூட அவரால் கேட்க முடிந்தது. அவர் வீட்டை ஒட்டிய திறந்த மைதானத்தில் நாங்கள் அந்த காலத்தில் கிரிக்கெட் விளையாடுவோம்.
எங்களுடைய பந்து அவரது வளாகத்தில் விழும்போதெல்லாம் நாங்கள் அவரது வீட்டின் கேட்டை மிக மிக எச்சரிக்கையுடன் திறந்து, அடிமேல் அடி வைத்து உள்ளே சென்று பந்தை எடுத்து வருவோம். அந்த பாட்டி போர்டிகோவில் காதுகளை தீட்டிக்கொண்டு அமர்ந்திருப்பாள். ஒரு துளி சத்தம் வந்தாலும் 'காள் காள்' என்று கத்த ஆரம்பித்து விடுவார். அவ்வளவுதான், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான அவரது மகன் உள்ளேயிருந்து புலி மாதிரி பாய்ந்து எங்களை குதறிவிடுவார்.
காது கேளாமையில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முழு செவிடாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே அரை மற்றும் முக்கால் செவிடர்களால்தான் இவர்களில் முக்கால்வாசி பேர்கள் தெளிவாகக் கேட்க முடிவது போல நடித்து வேடிக்கையான சூழ்நிலைகளை உருவாக்கி நகைப்புக்குரியவர்களாக தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். இவர்களிடம் நாம் ஒன்று கேட்போம் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான பதில் ஒன்றை சொல்லி சிரிப்பு அலைகளை ஏற்படுத்துவார்கள்.
காது கேளாதவர்களின் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் முற்றிலும் காது கேளாதவர்களால் கூட சில நேரங்களில் கேட்க முடிகிறது. அவர்களின் செவிட்டுத்தன்மையை நீங்கள் எப்போதும் பயன்படுத்திக் குறும்புகளில் ஈடுபட முடியாது. அப்படிதான் என் நண்பர் ஒருவர் தன் மனைவியை செவிடுதானே என்று தப்பும் தவறுமா ஏதோ சொல்ல அம்மணி விட்டாளே பார்க்கணும் அவர் கன்னத்தில் ஒரு அறை. அப்போது அவர் காதில் ஏற்பட்ட அலைகளின் ஓசை கடைசிவரை ஓயவில்லை.
நான் ஒரு நீரிழிவு நோயாளியாக இருப்பதால் என் கண்களை சீரான இடைவெளியில் பரிசோதிக்குமாறு என் மருத்துவர் எனக்கு அறிவுறுத்தினார். நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண் மருத்துவரை சந்திப்பது மட்டுமல்லாமல், என் காதுகளை ENT மருத்துவரிடம் காட்டுகிறேன்.
சரியாகப் பார்க்க முடியாத நிலையில், மக்கள் கண் மருத்துவரிடம் விரைகிறார்கள். அவர்களின் பற்கள் வலிக்கும் போது உடனடியாக பல் மருத்துவரிடம் அவற்றை காட்டி சரி செய்து விடுவார்கள். கேட்கும் திறன் குறைந்தவர்கள் ஏன் ENT மருத்துவரை அணுக தயங்குகிறார்கள் தெரியவில்லை. மக்கள் ஏன் தங்களுக்கு காது பிரச்சனை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
உங்கள் கண்களைப் பரிசோதித்து, பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அணிய தொடங்காவிட்டால் பார்வை மோசமடைகிறது. அதேபோல், நீங்கள் ENT மருத்துவரிடம் சென்று காது கேட்கும் கருவியை அணியத் தொடங்கவில்லை என்றால் உங்கள் செவித்திறன் மோசமாகிவிடும். கேட்கும் திறனை இழப்பது பார்வையை இழப்பதை விட கஷ்டம் கொடுக்கும் ஒரு விஷயம்.
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"
மறக்க கூடாது வள்ளுவர் சொல்லை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)