

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழையின் போது அதிக அளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. பயிர்களை பாதுகாப்பதற்கு விவசாயிகள் முன்னேற்பாடுகளை செய்து வந்தாலும், எதிர்பாராத புயல் மற்றும் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைகின்றன.
ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளையே கடைசி நான் என்பதால், விரைந்து பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மோந்தா புயல் காரணமாக கன மழை பெய்தது. இந்தப் புயல் ஆந்திராவின் காக்கிநாடாவில் கரையைக் கடந்த நிலையில், சென்னையில் பேரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
வருகின்ற நவம்பர் 17, 18 ஆகிய இரு தினங்களில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பயிர் காப்பீடு செய்வது, எதிர்பாராத நிதி நெருக்கடிகளில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற உதவும்.
இந்நிலையில் விவசாயிகள் நடப்பாண்டு பருவ மழை காலத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்தது தமிழக அரசு. இந்த காலக்கெடு நாளை முடிவடைவதால், விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் மேலும் கூறுகையில், “ நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதி தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழையால் பயிர்கள் சேதமடைந்தால், விவசாயிகளால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்படும் என்பதால், பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு நாளையே கடைசி நாள். இதனால் விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீடு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் ஆர்வமுடன் இருந்தாலும், பயிர் காப்பீட்டு விதிமுறைகள் விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடிய வகையில் இல்லை என்பதே உண்மை. பயிர் காப்பீட்டைப் பொருத்தவரை, ஒரு வட்டாரத்தில் பயிர்களில் எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கணக்கில் கொண்டே வழங்கப்படுகிறது. இதனால் தனிநபர் விவசாயிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
விவசாயிகள் மட்டும் தனித்தனியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டியுள்ள நிலையில், இழப்பீட்டையும் தனித்தனியாகவே பார்க்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னமும் விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், நடப்பாண்டிலாவது நல்வழி பிறக்குமா என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.