
தென் இந்தியாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் பணக்கார கோவிலாகவும் திருப்பதி திருமலை உள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தானம் தொடர்ந்து எந்த குறையும் இல்லாமல் செய்து வருகிறது.
சேஷாசலம் மலையில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் அமைந்துள்ள திருமலைக்கு பலர் சொந்த வாகனங்கள், கார்களில், வேன்களில், பேருந்துகளில் அதிகம் பேர் வருகிறார்கள். திருமலை மலை அடிவாரத்தில் அலிபிரி சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இங்கு இருந்து தான் திருப்பதி-திருமலை மலைப்பாதை தொடங்குகிறது.
திருப்பதி திருமலைக்கு வரும் வாகனங்களில் அதிகளவு அலிபிரி சோதனைச் சாவடி வழியாகவே வருவதன் காரணமாக அங்கு எப்போதுமே நெரிசல் அதிகமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க அலிபிரி சோதனைச் சாவடி மற்றும் திருமலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இதையடுத்து நெரிசலை குறைக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளது போல் திருப்பதி திருமலையில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் பாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் திருமலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) அதிரடியாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அலிபிரி சோதனைச் சாவடியில் ஏற்படும் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை குறைத்து பக்தர்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான சேவைகளை உறுதிசெய்யும் வகையிலும் ஃபாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் இல்லாத பக்தர்களின் வசதிக்காக, அலிபிரி சோதனைச் சாவடியிலேயே அதைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ICICI வங்கியுடன் இணைந்து ஒரு ஃபாஸ்டேக் வழங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் ஃபாஸ்டேக் அட்டைக்கான கட்டணத்தை நீங்கள் செலுத்திய பின்னர், விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு உடனடியாக உங்களுக்கு ஃபாஸ்டேக் அட்டை வழங்கப்படும்.
அதை உங்கள் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டி, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் ஃபாஸ்டேக் பெறுவதற்கு வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு ஆகியவற்றை ஆவணங்களாக சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
சிரமத்தை தவிர்க்க திருப்பதி வரும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்படுமாறு திருப்பதி திருமலை தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.