

சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் அரசு கூடுதல் இருப்பு கட்டுப்பாடுகளையும், வியாபாரிகள் அதிகளவில் சர்க்கரை சேமிக்கத் தடையையும் விதித்துள்ளது. இந்த நடவடிக்கை வியாபாரிகளிடையே அதிருப்தியையும், பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் சர்க்கரைக்கான தேவையும் அதிகரிக்கும். ஆனால் சா்க்கரை விலை எப்போதும் இல்லாத வகையில் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.
இதையடுத்து விலை தொடா்ந்து அதிகரிப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாடுகளுக்கு சா்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்ததோடு, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சா்க்கரை இறக்குமதியை அனுமதித்தது. சா்க்கரை இருப்பு தொடா்பான விதியையும் மத்திய அரசு கடுமையாக்கியது.
இருப்பினும் சில்லறை விற்பனையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதமும், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 38.63 சதவீதம் அதிகமென்றும் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
எனினும் தற்போது சர்க்கரை தட்டுப்பாடு இல்லை என்றும், அரசின் நடவடிக்கைகளால் விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் நடவடிக்கைகளாகவே இந்த செய்தி தற்போது வந்துள்ளது. சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும், பதுக்கலைக் கட்டுப்படுத்தவும் வியாபாரிகளுக்கான சர்க்கரை இருப்பு வரம்பை மத்திய அரசு 4,000 குவிண்டாலில் இருந்து 2,000 குவிண்டாலாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வரம்பு செப்டம்பர் 15 முதல் அமலாகும் எனவும் நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் போதுமான சர்க்கரை இருப்பை உறுதி செய்வதற்கும் , வியாபாரிகளின் சர்க்கரைப் பதுக்கலைத் தடுப்பதற்கும் வழிவகை செய்யும் வகையில் மத்திய அரசு சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு வரம்பை குறைத்துள்ளது.
சர்க்கரை வியாபாரிகளுக்கு அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. திருத்தப்பட்ட விதிகளின்படி புதிய வரம்பு 2026 செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் நிலையில் சர்க்கரை வியாபாரிகள் பொருட்களைப் பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் எந்த பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது. நாடு முழுவதும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் 2,000 குவிண்டாலுக்கு மிகுதியாக சர்க்கரையை இருப்பு வைத்திருக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவு சா்க்கரையை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது.
மேலும், அக்டோபா் 31-ஆம் தேதி வரை 10 லட்சம் டன் கச்சா சா்க்கரை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், சில்லறை விற்பனையில் விலை குறையவில்லை என்றும் இதற்கு பதுக்கலும் ஒரு காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான் மத்திய உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 4,000 குவிண்டாலுக்கு மேல் சா்க்கரை இருப்பு வைக்கக் கூடாது என்றும் அடுத்தகட்டமாக செப்டம்பா் 15 முதல் நவம்பா் 30 வரை 2,000 குவிண்டாலுக்கு மேல் யாரும் சா்க்கரை இருப்பு வைக்கக் கூடாது. மொத்த விற்பனையாளா்கள் 30 நாள்களுக்கு மேல் சா்க்கரை விற்பனை செய்யாமல் வைத்திருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.
இருப்பினும் இந்த விதிகள் கொல்கத்தாவிற்கு பொருந்தாது. காரணம் கொல்கத்தா பகுதியானது உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவிலிருந்து சர்க்கரையைப் பெற்று, வடகிழக்குப் பகுதி உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிக்கு விநியோகம் செய்கிறது. ஆகவே சந்தைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கொல்கத்தா, அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகளுக்கான கையிருப்பு வரம்பு 4,000 குவிண்டாலாகவே நீடிக்கும் எனத் தெரிகிறது.
முன் போல் தற்போது நியாய விலைக்கடைகளிலும் (ரேஷன் கடைகள்) அதிக அளவு சா்க்கரையை எதிர்பார்க்கமுடியாது.
வழக்கமான குடும்ப அட்டைக்கு மாதத்திற்கு ஒரு நபருக்கு 500 கிராம், அதிகபட்சம் ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ வழங்கப்படுகிறது. அதேபோல் சர்க்கரை விருப்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 3 கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.
வெளிச்சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்திருந்தாலும், நியாயவிலைக் கடையின் அரசு நிர்ணயித்த விலையாக இன்னும் 25 ரூபாய் என்றே இருப்பது நடுத்தர, வறிய குடும்ப மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.
ஆனால் இந்த விலையேற்றத்தால் நியாய விலைக்கடைகளிலும் சர்க்கரை விலையை உயருமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.