கடந்த சில நாட்களாக சினிமா பிரபலங்கள் பலரும் பழனி முருகன் கோயிலுக்குச் சென்று வணங்கி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலுக்குச் சென்று, கோயில் படிக்கட்டுகளில் விளக்கேற்றி வழிபட்டதைப் பார்த்தோம். அதன் பிறகு நடிகை அமலாபால் சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று சந்தானம் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் பழனி முருகனை தரிசித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
ஏன் இப்போது மட்டும் பழனி முருகன் கோயிலுக்கு பிரபலங்கள் பலரும் படையெடுக்கிறார்கள்? விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்...
முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்கு முருகப்பெருமான் ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த முருகன் சிலையை அகத்தியரின் தலைமைச் சீடர் போகர் உருவாக்கினார் என்கிறது புராணம்.
இந்தக் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் போன்ற விசேஷ தினங்களின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தைப்பூசத் தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வருவது மிகவும் பிரசித்தம்.
முருகன் ஆண்டிக் கோலத்தில் வீற்றிருக்கும் இந்தக் கோயிலில் கடைசியாக கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மீண்டும் 2019–ல் பாலாலய பூஜையுடன் கோயிலுக்கான கும்பாபிஷேகத் திருப்பணிகள் தொடங்கின.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஜனவரி 27ம் தேதி பக்தர்கள் புடைசூழ இக்கோயிலின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏறக்குறைய 16 வருடங்களுக்குப் பிறகு இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று இருப்பதால் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது வழக்கமான சம்பிரதாயம்தானே என எடுத்துக்கொண்டாலும், கடந்த சில நாட்களாக பழனி கோயிலுக்கு வரும் சினிமா பிரபலங்களின் வருகை அதிகமாக இருப்பது போலத் தெரிகிறது.
தினமும் கோயிலுக்கு செல்வது நல்லதுதான் என்றாலும், கும்பாபிஷேக விழாவில் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்வது என்பது சென்றவருக்கும், சென்றவரின் குடும்பத்திற்கும் அதிக பலன்களை தரும் என்பது ஐதீகம்.
கும்பாபிஷேகத்திற்கு கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அதன் பிறகு 48 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையின்போது அந்தக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால், கும்பாபிஷேக தரிசன பலனைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல... முக்கிய அரசியல் பிரமுகர்களின் மனைவிகள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் வந்து முருகனை தரிசனம் செய்து விட்டு சென்றிருக்கிறார்களாம். இந்த பிரபலங்களின் வருகை வரும் நாட்களில் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம். இதனால் வியாபாரம் நன்றாக நடப்பதால் வியாபாரிகள் மகிச்சியில் உள்ளனர்.