காலத்தால் அழியாத திரைப்படங்களைத் தந்த இயக்குனர் ‘பசி’ துரை மறைவு!

Director Durai
Director Duraihttps://www.nakkheeran.in

மிழ்த் திரையுலகில் மறக்க முடியாத கதைகளை எழுதி. இயக்கி  மக்கள் மனதில் இடம் பிடித்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் துரை. தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராகத் திகழ்ந்த கலைமாமணி விருது பெற்ற இயக்குநர் துரை உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1940ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி பிறந்தவர் துரை. சிறு வயதிலிருந்தே திரைப்படத் துறையில் ஆர்வம் இருந்த இவர், சிறந்த திரைக்கதை இயக்கம் மூலம் சினிமாவில் வெற்றியும் பெற்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகிலும் பணியாற்றியுள்ள இயக்குனர் துரை, இதுவரை 46 படங்களை இயக்கி உள்ளார். மேலும், சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு விருது, தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

2011ல் 58வது தேசிய திரைப்பட விருதுகளில் (இந்தியா) சார்பில் நடுவராகப் பணியாற்றி சிறப்பு சேர்த்தவர். 2011 வரை இவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஆண்களின் பாத்திரமே பிரதானமாக இருந்த காலகட்டத்தில், கதையின் நாயகிகளாக  பெண்களை மையமாக வைத்தும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை பற்றிய படங்களை இயக்கியதும் பலரையும் ஆச்சர்யப்பட வைத்து, ‘யார் இவர்?’ எனப் பார்க்க வைத்தது. இன்னும் சொல்லப்போனால எவரும் தொடத் தயங்கும் கதைக் களங்களை இவர்  துணிந்து படமாக்கி எதிர்மறை விமர்சனங்களுடன் திரையுலகில் வெற்றியும் பெற்றார்.

உதாரணத்திற்கு, 1974ம் ஆண்டு சுமித்ரா, முத்துராமன் நடித்த 'அவளும் பெண்தானே' என்கிற திரைப்படத்தை இயக்கி அதில் பாலியல் தொழிலாளி குறித்துப் பேசி இருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  வெற்றி பெற்றது.  தொடர்ந்து, 1975ம் ஆண்டு, ‘ஒரு குடும்பத்தின் கதை’ என்கிற படத்தை இயக்கி தன்னுடைய அடுத்த வெற்றியை தமிழ் சினிமா உலகில்  பதிவு செய்தார்.

நடிகை ஷோபா, நடிகர்கள் விஜயன், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்து 1979ம் ஆண்டு நடித்து, இவர் எழுதி, இயக்கிய படம் ‘பசி.’  தேசிய திரைப்பட விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருது, தென்னக விருது ஆகியவற்றில் தலா இரண்டு விருதுகளை வென்று பேசப்பட்டது. இது இந்தியில் இயக்குநர் துரையால், ‘பெட் பியார் அவுர் பாப்’ என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. சேரிவாசிகளின் நிஜ வாழ்க்கையைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் கதையையும், இயற்கையான உரையாடல்களையும் இந்தப் படத்தில் இயக்குநர் துரை அற்புதமாகக் காட்சிப்படுத்தி இருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. இன்றும், ‘பசி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் என்றே கூறலாம்.

இத்திரைப்படம் தந்த வெற்றி அவரது அடையாளமாகவே மாறி, ‘பசி’ துரை என்று அனைவராலும் அறியப்பட்டது சிறப்பு. அத்துடன் அதில் நடித்த நடிகைகளும் பசி ஷோபா, பசி சத்யா என அறியப்பட்டனர். அதில் நடித்த ஷோபாவின் இயல்பான நடிப்பு பெரும் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இலங்கை: கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்து… 7 பேர் பலி!
Director Durai

மேலும், இவர் இயக்கத்தில் வெளியான, அவளும் பெண்தானா, நீயா , கிளிஞ்சல்கள், புதிய அத்தியாயம், ஆசை 60 நாள் போன்ற திரைப்படங்கள் தற்போது வரை அதிகம் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ‘புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும் துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாகத் திகழ்ந்தவர் அவர்’ என்று குறிப்பிட்டு புகழஞ்சலி  செலுத்தியுள்ளார்.

மறைந்த இயக்குநர் துரைக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். திரையுலகில் பெண்களை முக்கியத்துவப்படுத்தி, தவிர்க்க முடியாத படைப்புகளைத் தந்த இயக்குநர் துரை என்றும் தமிழ் திரை ரசிகர்களின் நினைவில் வாழ்வார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com