

நீங்கள் ஏதாவது ஒரு ஓட்டலுக்கு உங்கள் நண்பர் அல்லது காதலியுடன் காபி குடிக்கச் சென்று, ஒரு வசதியான மூலையில் தேர்வு செய்து அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தால், இனிமேல் பெங்களூருவில் இந்த பழக்கத்திற்கு விரைவில் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
குறைந்தபட்ச ஆர்டர்களை செய்து விட்டு பிறகு நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு, ரியல் எஸ்டேட்/அரசியல் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 'டேபிள் கட்டணங்கள்' அறிமுகப்படுத்துவது குறித்து பெங்களூருவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர். இந்த திட்டம் தற்போது விவாதத்தில் உள்ள நிலையில் விரைவில் அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படலாம்.
ஆமாங்க டீ, சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு ஹோட்டல்களில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் அபராதம் விதிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்த பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
பெங்களூருவில் அதிகளவிளான சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள், உணவகங்கள், டிபன் சென்டர்கள் உள்ளன. இந்நிலையில் பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், பல சிறிய மற்றும் நடுத்தர ஹோட்டல்கள், ஹோட்டல் வளாகங்களை முறைசாரா சந்திப்பு இடங்களாகப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதாவது இங்கு டீ, காபி குடிக்க செல்வோரும், சிற்றுண்டி சாப்பிட செல்வோரும் சாப்பிட்டு முடிந்தவுடன் அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல் மணிக்கணக்கில் அதே இருக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனால் புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் வந்தால் கூட, ஏற்கனவே டீ குடித்துவிட்டு இருப்பவர்களோ, சிற்றுண்டி சாப்பிட்டு முடித்தவர்களோ எழுந்து செல்லாமல் நீண்ட நேரமாக தங்களுடன் வந்தவர்களுடனோ அல்லது செல்போனிலோ பேசியபடி இருப்பதாகவும், ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் விவாதங்களை ஆலோசிப்பதாவும், இன்னும் சிலர் ஓட்டல்களில் அமர்ந்து கொண்டு மடிக்கணினியில் வேலை செய்து கொண்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.
மேலும் வாடிக்கையாளர்களின் இத்தகைய செயலால் டீக்கடை, பேக்கரி, ஹோட்டல், உணவகங்களில் வருவாய் பாதிக்கப்பட்டு வருவதாக உரிமையளாகள் கூறி வருகின்றார்கள்.
இதை தவிர்க்கவும், வருவாயை பெருக்கும் நோக்கிலும் ஹோட்டல்கள், டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதாவது உணவகங்கள், ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் அமர்ந்து சாப்பிடுவதை தடுக்க டேபிள் கட்டணம் அல்லது அபராதம் விதிக்க ஓட்டல்கள் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் ஹோட்டல்கள் ரியல் எஸ்டேட்/அரசியல் விவாதங்களுக்கு அல்ல, உணவருந்தும் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
டீ, சிற்றுண்டி சாப்பிட வருவோர் இருக்கையில் அமர குறிப்பிட்ட நேரம் மட்டுமே இலவசமாக அனுமதி என்றும், நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், அவர்களுக்கு டேபிள் கட்டணம் அல்லது அபராதம் விதிக்க தீவிர ஆலோசனை செய்து வருகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டணம் ரூ.500 முதல் ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய நடைமுறையை அதிகாரபூர்வமாக செயல்படுத்த கர்நாடக அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகவும் உத்தரவு கிடைத்தவுடன் புதிய நடைமுறையை அமல்படுத்தப்படும் என்று பெங்களூரு ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கூறியுள்ளார்.
ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மீது இதுபோன்ற அபராதங்களை விதிக்க எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் இந்த நடவடிக்கை ஹோட்டல் உரிமையாளர்களை இந்த முடிவு எடுக்க தூண்டியுள்ளது.
பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோன்ற ஒரு சம்பவம் ஒரு ஹோட்டலில் நடந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் அதிகநேரம் அமர்ந்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தது ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேஜையில் அமர்ந்தால் வாடிக்கையார்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.