
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு முக்கிய முயற்சியாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்போது முழுமையாக மின்சாரத்திலேயே இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் இன்று முதல் (ஆகஸ்ட் 11-ம் தேதி) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபகாலமாக சுற்றுச் சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையிலும், எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
தற்போது, ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட 625 மின்சாரப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் முதற்கட்டமாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி வியாசர்பாடி பணி நிலையம் வழியாக 120 மின்சாரப் பேருந்துகள் சேவை தொடங்கியது. தற்போது, இரண்டாம் கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கப்பட உள்ளது.
பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளும், 80 சாதாரண மின்சார பேருந்துகளும் இன்று (ஆகஸ்ட் 11-ம் தேதி)முதல் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, படிப்படியாக பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்தளப் பேருந்துகளில், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்காக பல்வேறும் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 7 சிசிடிவி கேமராக்கள், சீட் பெல்ட், அவசர கால பொத்தான்கள், சார்ஜிங் பாய்ண்ட்டுகள், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திற்கும் அறிவிப்புகளை வெளியிடும் ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மின்சார பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன. தற்போது அதில் ஏசி மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வருகின்றன.
இனி சென்னை மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து, ஜாலியாக ஏசி மின்சார பேருந்துகளில் பயணிப்பது பயணிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.