
பெட்ரோல், டீசல் போன்ற எரிப்பொருள் மூலம் இயக்கப்படும் வாகனங்களால் ‘கார்பன் டை ஆக்சைடு' என்ற கரியமில வாயு வெளியேறி காற்று மாசடைகிறது. புவி வெப்பமாதலும் அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கு குந்தகம் உண்டாகிறது. இதனால் காலநிலை மாற்ற அபாய எச்சரிக்கை மணியை உலக சுகாதார அமைப்பும், ஐ.நா. சபையும் தொடர்ந்து எழுப்பி வருகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகன பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் 1,225 தாழ்தள மின்சார பஸ் சேவையை தொடங்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டது.
அதன் அடிப்படையில் 120 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இந்த மின்சார பஸ்களில் பெண் கண்டக்டர்களே அதிகளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால் போக்குவரத்தில் பசுமை இல்லா வாயு உமிழ்வு அதிகளவு வெளியேறுகிறது. ஒவ்வொரு டீசல் பஸ்சும் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 755 கிராம் கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறது. இது 2005-2019 காலகட்டத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை மின்மயமாக்குவதன் மூலம் பசுமை இல்லா வாயு உமிழ்வை அதிகரிப்பதை தடுக்கவும், சமன் செய்யவும் முடியும். மேலும் மின்சார பஸ்களை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம்.
சென்னையில் முதல்கட்ட திட்டத்தில் உள்ள 5 பணிமனைகளில் வியாசர்பாடி பணிமனை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பெரும்பாக்கம், மத்திய பணிமனை, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய இடங்களில் பணிமனைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படிப்படியாக இந்த பணிமனைகள் திறக்கப்பட்டு புதிய வழித்தடங்களில் 605 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
முதல்கட்ட பணிகள் முடிவடைந்த பின்னர் ஆலந்தூர், மத்திய பணிமனை, பாடியநல்லூர், பெரம்பூர், ஆவடி, அய்யப்பன்தாங்கல் ஆகிய 6 இடங்களில் மின்சார பஸ் பணிமனைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும்,
இந்த பணி முடிவடைந்தவுடன் 600 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் சேவையை தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய தாழ்தள மின்சார பஸ்களில் ஏ.சி. வசதியும் இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மின்சார பஸ்ஸில் பெண்கள் ‘டிக்கெட்' இல்லாமல் பயணிக்க முடியாது. மாநகர தாழ்தள சொகுசு பஸ்களில் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணமே (11 ரூபாய்) மின்சார பஸ்சுக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு அம்சங்கள் :
* பயணிகள் பாதுகாப்புக்காக 7 கேமராக்களும், பயணத்தின்போது ஏதேனும் அசாதரண சூழல் ஏற்பட்டால் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் 13 அவசர கால சுவிட்சுகள் வைக்கப்பட்டுள்ளன.
* மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 6 இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் சிரமமின்றி பஸ்சில் ஏறும் வகையில் மடக்கும் வசதி கொண்ட சாய்வுதள படிக்கட்டும் இடம் பெற்றுள்ளது.
* பஸ் வேகமாக செல்லும்போது பயணிகள் தடுமாறாமல் இருக்க ‘சீட் பெல்ட்'டுடன் ஒவ்வொரு இருக்கையும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
* ஒவ்வொரு இருக்கையின் கீழும் செல்போன் சார்ஜிங் பாயிண்ட்டும், பஸ் விபத்தில் சிக்கினால் பயணிகள் உடனடியாக வெளியேற 2 அவசர கால வழிகளும், மருத்துவ முதலுதவி பெட்டகமும் வைக்கப்பட்டு உள்ளது.
மின்சார பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் :
1. வழித்தட எண்: 2பி- கவியரசு கண்ணதாசன் நகர்-அண்ணா சதுக்கம்- கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்)
2. 18ஏ- பிராட்வே-கிளாம்பாக்கம்
3. சி33- கவியரசு கண்ணதாசன் நகர்-பிராட்வே-கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்) (செல்லும் போது-மகாகவி பாரதி நகர் வழி, வரும் போது- மூலக்கடை வழி)
4. சி64- கவியரசு கண்ணதாசன் நகர்-பிராட்வே-கவியரசு கண்ணதாசன் நகர் (சுற்று பஸ்) (செல்லும்போது மூலக்கடை வழி, வரும்போது- மகாகவி பாரதி நகர் வழி)
5. 37- பூந்தமல்லி-வள்ளலார் நகர் (குமணன்சாவடி வழியாக)
6. 46ஜி- மகாகவி பாரதி நகர்-கோயம்பேடு (அரும்பாக்கம் வழியாக)
7. 57- வள்ளலார் நகர்-செங்குன்றம்
8. 57எக்ஸ்- வள்ளலார் நகர்-பெரியபாளையம்
9. 164இ- பெரம்பூர்-மணலி
10. 170டி.எக்ஸ்- மகாகவி பாரதி நகர்- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் (மூலக்கடை, கோயம்பேடு வழியாக)
11. 170சி- திரு.வி.க.நகர்-கிண்டி திரு.வி.க. எஸ்டேட் (கொளத்தூர், கோயம்பேடு வழியாக)