இந்தியாவில் முதல் டெஸ்லா அனுபவ மையம் திறப்பு! எப்போ தெரியுமா..?
இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் எலோன் மஸ்க்கின் டெஸ்லா அனுபவ மையம் திறக்கப்படவுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, நீண்டகால எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இந்தியாவில் தனது முதல் அனுபவ மையத்தை (Experience Center) மும்பையில் திறக்கவுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி ஜியோ வேர்ல்ட் டிரைவ் (Jio World Drive) வளாகத்தில் இந்த மையம் திறக்கப்படவுள்ளது.
மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (Bandra Kurla Complex - BKC) பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் வளாகத்தில் 4,000 சதுர அடி பரப்பளவில் இந்த அனுபவ மையம் அமையவுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை ஸ்டோருக்கு அருகில் உள்ளது. இந்த மையம் டெஸ்லாவின் மின்சார கார்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும். இருப்பினும், இந்த மையம் திறந்ததும் சில காலங்கள் சோதனை ஓட்டங்கள் மற்றும் வாகன விநியோகங்கள் இங்கு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, டெஸ்லா மும்பையின் குர்லா வெஸ்ட் பகுதியில் ஒரு சேவை மையத்திற்கான இடத்தை குத்தகைக்கு எடுத்தது. மேலும், புனேவில் ஒரு பொறியியல் மையம், பெங்களூருவில் ஒரு பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸுக்கு அருகில் ஒரு தற்காலிக அலுவலகம் என இந்தியாவில் நான்கு முக்கிய இடங்களில் டெஸ்லா தனது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மின்சார வாகனத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ எம்.ஜி மோட்டார் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் வலுவான நிலையில் உள்ளன. ஆனால் டெஸ்லாவின் பிரீமியம் பிராண்ட், புதுமை மற்றும் மலிவு விலை ஆகியவை இந்தியாவின் அனைத்து விதமான நுகர்வோரையும் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக டெஸ்லா ஏற்கனவே ஷாங்காய் தொழிற்சாலையிலிருந்து மும்பைக்கு ஐந்து மாடல் ஒய் வாகனங்களை அனுப்பியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு காரின் விலையும் தோராயமாக ₹27.7 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான அதிக வரி விகிதங்கள் போன்ற சவால்களை டெஸ்லா எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், இந்த அனுபவ மையம் திறப்பு, எவ்வளவு சவால்கள் வந்தாலும் டெஸ்லா இந்திய சந்தையில் தனது தடத்தைப் பதிக்கத் தயாராக இருக்கிறது என்றே கூற வேண்டும்.
இந்த அனுபவ மையம், இந்திய வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லா வாகனங்களின் தனித்துவமான அம்சங்களையும், மின்சார வாகன தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தையும் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.